தலைமைப் பதவியை விட்டுக்கொடாதிருக்க ரணில் முடிவு; தொடரும் நெருக்கடி

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் இவ்வாரம் மாற்றங்கள் வருமென எதிர்பார்க்கப்பட்டாலும் அப்படி ஒன்று நடக்காதெனவும் தலைமைப் பதவியை ரணில் விட்டுக் கொடுக்கும் சூழ்நிலை இல்லையயன்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளை, கரு ஜயசூரிய ,சஜித் பிரேமதாஸ ஆகியோரைக் கொண்ட தலைமைத்துவச் சபை ஒன்றை இவ்வாரம் அமைக்க ரணில் திட்டமிட்டுள்ளார். ஆயினும் சஜித் தரப்பு அதனை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லையயனத் தெரிகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ நெருக்கடி மிக உச்சக் கட்டத்தை அடைந்துள்ள இந்தப்பின்னணியில் அந்தக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இரகசியப் பேச்சுக்களை நடத்தி வருகின்றனர்.

மூன்றிலிரண்டு பெரும்பான்மை கொண்ட ஆட்சியொன்றை அமைக்கும் வகையிலான அரசை அமைப்பது குறித்தும் அது தொடர்பான அரசியல் குறித்தும் இந்தப் பேச்சுக்களின்போது ஆராயப்படுவதாக அறியமுடிந்தது. இதற்கிடையில் இவ்வாரம் ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு கூடும்போது தலைமைத்துவ விவகாரம் தொடர்பில் வாக்கெடுப்பு எதுவும் நடத்தப்படமாட்டாதென மேலும் அறியமுடிந்தது.