தற்பாதுகாப்பிற்காக சீனாவின் மீது தாக்குதல் நடத்த எங்களுக்கு உரிமையுள்ளது தைவான்

தங்களைக் தற்காத்துக் கொள்வதற்காக, சீனாவின் அத்துமீறல்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு தங்கள் இராணுவத்தினருக்கு முழு உரிமையும் உள்ளது என தைவான் தெரிவித்துள்ளது.

இது குறித்து தைவான் இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, கடந்த வாரம் தைவான் ஜலசந்தியில் சீனாவின் ஜெற் விமானங்கள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தின. இந்த ஆண்டின் தொடக்கத்தில் எதிரிப் படைகள் எல்லைப் பகுதியில் தொடர்ந்து அத்துமீறி வருகின்றன. எல்லைப் பகுதியில் எதிரிகளின் அத்துமீறல்களுக்கு எதிராக எங்களைத் தற்காத்துக் கொள்ள எங்களுக்கு முழு உரிமை உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைவான் நாடு தனது நாட்டின் ஒருபகுதி என சீனா தொடர்ந்தும் உரிமை கொண்டாடி வருகின்றது. தைவான் அரச அதிபர் சாய் இங் வென்னுக்கு சீனா இந்த அழுத்தத்தைக் கொடுத்து வருகிறது.

அத்துடன் தென்சீனக் கடற்பகுதியையும் சீனா உரிமை கொண்டாடி வருகின்றது. இதற்கு வியட்நாம், தைவான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தென்சீனக் கடல் தொடர்பாக சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே முறுகல் நிலை உள்ளது.

அண்டை நாடுகளுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் சீனாவிற்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் முகமாக, கடந்த ஜுலை மாதம்  அமெரிக்கா 2 போர்க் கப்பல்களை அனுப்பி தென்சீனக் கடற்பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டது.

இதற்குப் பதிலடியாகவே தென்சீனக் கடற்பகுதியில் 2 ஏவுகணைகளைச் செலுத்தி சீனா போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தென்சீனக் கடற்பரப்பில் பதற்றம் நிலவுகின்றது.