தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு அக்கறையில்லை – டக்ளஸ்

பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபயா ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டக்ளஸ் தேவானந்தா பொது மக்களுடனான சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

நல்லூர் முத்திரைச்சந்திப் பகுதியில் நடைபெற்ற பொது மக்களின் கலந்துரையாடல் ஒன்றில் டக்ளஸ் தேவானந்தா பேசும் போது, தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேறும் தருணம் கிட்டியுள்ளதாகவும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபயா ராஜபக்ஸவை ஆதரிப்பதன் மூலம் மக்கள் இந்த தருணத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக காணி உரிமப் பிரச்சினை இப்பகுதி மக்களுக்கு அதிகம் உண்டு. மேலும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் அதிகம் உள்ளது.

இந்தப் பிரச்சினையை தீர்ப்பது பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அக்கறை கொள்ளாது சுயநலமாக செயற்படுகின்றனர்.  மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் நாம் அக்கறையுடன் இருக்கின்றோம்.

இந்தப் பணியை நாம் செய்வதற்கு எமக்கு மக்கள் அதிகாரம் அதிகம் தேவைப்படுகின்றது. அதனை மக்கள் இம்முறை எமக்குத் தருவார்கள் என நாம் நம்புகின்றோம்  என்றும் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

இதனிடையே, போர் நிறைவடைந்த பின்னர் 2015 ஆம் ஆண்டு வரையிலும் மகிந்தா ராஜபக்சாவின் ஆட்சியில் இருந்த போது டக்ளஸ் தமிழ் மக்களுக்கு என்ன நன்மைகளை செய்திருந்தார் என அவரே தன்னை கேள்வி கேட்கவேண்டும் என தெரிவித்துள்ள தமிழ் மக்கள், தற்போதைய நிலையில் தமிழத் தேசியக் கூட்டமைப்பும் சிறீலங்கா அரசின் ஒட்டுக்குழுவைப் போலவே செயற்படுவதாக தெரிவித்துள்ளனர்.