தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின் தமிழ் பிரிவு போன்று செயற்படுகின்றது – சிவாஜிலிங்கம்

இன்றைய சூழ்நிலைகளைப் பார்த்தால், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின் தமிழ் பிரிவு போன்று செயற்படுகின்றது. தேர்தலுக்கு அண்மித்த காலப்பகுதியில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்கச் சொல்வார்கள் என சிறிலங்கா அரசு தலைவர் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறினார்.

யாழ்ப்பாணம் யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் இன்று (10) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாடு பூராகவும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளேன். ஆனால், பாதுகாப்பு பிரச்சினைகள் உள்ளன. தெற்கில் காலி மாத்தறை பிரதேசங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுமென நினைக்கின்றேன். பாதுகாப்பு வழங்கப்பட்டால், காலி, மாத்தறை மாவட்டங்களில் செய்யலாம்.

கொழும்பு, மலையகம், வடகிழக்கு உள்ளிட்ட பிரதேசங்களில் எமக்கு கிடைக்கப்பெறும் வசதி வாய்ப்புக்களைப் பெற்றுக்கொண்டு தான், பிரச்சாரங்களில் ஈடுபடவேண்டியுள்ளது.

சாதிக்க முடியாமல் போகலாம், சாதிக்க முயற்சி எடுத்தவர்களாக மக்கள் மத்தியில் செயற்பட்டவனாக உயிரை விட வேண்டும் என்றார். பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் பிரதிநிதிகளை கைகோர்ப்பதற்கு, எனது நியமனம் வலுச்சேர்த்துள்ளது.

எந்தக் கட்சிகளுடனும், சர்வதேச விசாரணை மற்றும் போர்க்குற்ற விசாரணைகளுக்கான சமரசம் இல்லை. அது யாராக இருந்தாலும், போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கையை முன்னெடுப்போம். அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

அதேநேரம், நேற்று முன்தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிவாஸிலிங்கத்திற்கு பித்துப் பிடித்ததுள்ளதாக தனது பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

அந்த விடயம் தொடர்பில் வினவிய போது, இவ்வாறு பதிலளித்தார்.

சிவாஜிலிங்கத்திற்கு பித்துப் பிடித்துள்ளதென்றால், கஜேந்திரகுமார் தேசியவாதி என்றால், 2010 ஆம் ஆண்டு சரத் பொன்சேகா போட்டியிட்ட போது, அவரின் கட்சியைச் சேர்ந்த பத்மினி சிதம்பரநாதன், தமிழ் தேசியம் கிடைக்குமென்றா, சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு கோரி நல்லூர் மந்திரிமனையில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஆதரவு கோரி உரையாற்றியிருந்தார். சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு 10 லட்சம் கொடுக்கப்பட்டு செலவு செய்யப்பட்டதே இதைப் பற்றி என்ன சொல்லப் போகின்றார்கள்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்த பின்னர், சிறையில் உள்ள இராணுவத்தினரை திறந்துவிடப்போவதாக கோட்டாபய கூறுகின்றார். ஏன் 26 வருடங்களாக சிறையில் உள்ள அரசியல் கைதிகளை திறந்துவிடச் சொல்லும் தென்பு யாருக்காவது உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார்.

ஏன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம், அமைச்சரவை பத்திரத்தைப் போட்டு, அரசியல் கைதிகளை திறந்து விடுகின்றோம் என்று சொல்லலாமே?

இன்றைய சூழ்நிலைகளைப் பார்த்தால், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின் தமிழ் பிரிவு போன்று செயற்படுகின்றது. தேர்தலுக்கு அண்மித்த காலப்பகுதியில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்கச் சொல்வார்கள். ஆகவே, எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என்றார்.