தமிழ் தேசிய இருப்பை நிலைநிறுத்த ஓரணியில் பயணிப்போம் -அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம்

அனைத்துலக நியமங்களின் படி சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறைகளையும், எமது இனத்தின் உரிமைகளையும், இலங்கை அரசியல் சாசனத்தின் புறக்கணிப்புகளையும், தமிழினத்தின் மீதான இனவழிப்பையும் அனைத்துலக சமூகத்திடம் கொண்டு செல்வதற்கு சனநாயக பொறிமுறைக்கூடாக தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் தேவைப்படுகின்றனர். இதற்கு தாயகம், தமிழகம், புலம்பெயர் சமூகம் ஆகியவற்றில் வாழும் அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து ஈழத்தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்புள்ளவர்கள் எமக்குத் தேவை. எனவே இந்த தேர்தலில் நாம் கட்சி பேதம் பாராது, தமிழ்தேசியத்தின்பால் ஈடுபாடுகொண்டுள்ள வேட்பாளர்களை நோக்கி எமது வாக்குகளை அளிக்கவேண்டும் என அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம் நேற்று (30) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அறிக்கையின் முழுவடிவம் வருமாறு:

ICETR logo தமிழ் தேசிய இருப்பை நிலைநிறுத்த ஓரணியில் பயணிப்போம் -அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம்ஒருங்கிணைந்து முடிவெடுப்போம்தமிழ் தேசிய இருப்பை நிலைநிறுத்த ஓரணியில் பயணிப்போம்.

எதிர்வரும் 2020 ஓகஸ்ட் 5 ஆம் நாள் இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலானது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பெறுவதற்கான ஒரு வழியல்ல என்பதை தமிழ் இனம் நன்கு பட்டறிந்துள்ளது. என்றுமே மாறாத  பெரும்பான்மை சிங்கள உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் தமிழ் இனத்தின் உரிமைக்குரல்கள் புறக்கணிக்கப்பட்டதே வரலாறு. தமிழர் தாயக பகுதிகளை விழுங்கி மக்களை இனப்படுகொலை செய்த அரசு தற்போது தமிழ் இனத்தின் தொன்மைக்கான அடையாளங்களை அழிப்பதனூடாக வரலாற்றை மாற்றி இனவழிப்பை வலிமைப்படுத்த முயல்கிறது.

இலங்கையில் இன்று தமிழ் தேசிய இனம் உள்ளகத் தன்னாட்சி உரிமையைப் பயன்படுத்தி சனநாயக வழியில் உரிமைகளை நிலைநிறுத்த முடியாமல் தடுக்கப்பட்டுள்ளது. எனவே எம்மினத்தின் வெளியகத் தன்னாட்சி உரிமையை பயன்படுத்தி சர்வதேச நாடுகளினதும், அமைப்புக்களினதும் ஆதரவுடன் தமிழ் தேசிய இனத்தின் உரிமைகளை நிலைநாட்டுவதுடன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியையும், யுத்தக் குற்றச் செயல்கள், மற்றும் இனவழிப்பு ஆகியவற்றுக்கான நீதியையும் பெறுவதே இன்று எம்மினத்தின் முன் உள்ள ஒரே வழியாகும்.

இதற்காக நாம் இந்த தேர்தலிலும் தமிழ் இனத்திற்கான பிரதிநிதிகளை பெரும்பான்மையாக தெரிவுசெய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். ஏனெனில் அனைத்துலக நியமங்களின் படி சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறைகளையும், எமது இனத்தின் உரிமைகளையும், இலங்கை அரசியல் சாசனத்தின் புறக்கணிப்புகளையும், தமிழினத்தின் மீதான இனவழிப்பையும் அனைத்துலக சமூகத்திடம் கொண்டு செல்வதற்கு சனநாயக பொறிமுறைக்கூடாக தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் தேவைப்படுகின்றனர். இதற்கு தாயகம், தமிழகம், புலம்பெயர் சமூகம் ஆகியவற்றில் வாழும் அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து ஈழத்தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்புள்ளவர்கள் எமக்குத் தேவை.

தற்போதைய நிலையில் இலங்கை அரசு திட்டமிட்டு தமிழர்களின் வாக்கு பலத்தை சிதைத்து தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை குறைக்க பல இனவாத, மதவாத, மற்றும் அரச சார்பு உதிரி வேட்பாளர்களை தாயகப் பகுதிகளில் களமிறக்கியுள்ளது. கொள்கையளவில் தமிழ் தேசிய இனத்தின் இருப்பை வலியுறுத்தும் மூன்று அரசியல் கட்சிகள் உள்ளபோதும், அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்தகால நடவடிக்கைகள் மூலம் அதன் மீதான மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது.

ஆயுத போர் மௌனிப்பின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரு தடவைகள் தெரிவுசெய்பட்ட போதும், அவர்களால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை மட்டுமல்லாது, அவர்களின் அடிப்படைத் தேவைகளை கூட பூர்த்திசெய்ய முடியவில்லை. மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தனக்கு மக்கள் இட்ட ஆணையை மறந்து ஐ.நா சபையில் கிடைத்த சந்தர்ப்பத்தையும் இலங்கை அரசுக்கு சார்பாக மாற்றிய வரலாற்றுத் தவறை செய்திருந்தது.

தாயகத்தில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்பையோ, பௌத்த சிங்கள மயமாக்கலையோ, சமூகச் சீரழிவுகளையோ இட்டு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என தம்மை அடையாளப்படுத்தி நாடாளுமன்றம் சென்றோர் அக்கறை காட்டவில்லை. இனப்படுகொலையின் உயிர்ப்புள்ள ஆதாரமாக விளங்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதியை பெற்று கொடுக்க இம்மியளவும் முயலவில்லை. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக எந்தவித ஆக்கபூர்வமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.

ஆனாலும் சிங்கள, இஸ்லாமிய மக்கள் வாழும் தமிழர் பகுதிகளிலும் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை தக்கவைப்பதற்கான மூலோபாயங்களை வகுக்கவேண்டிய தேவை ஒன்றும் எமக்குண்டு. எனவே தான் இந்த தேர்தலில் நாம் கட்சி பேதம் பாராது, தமிழ்தேசியத்தின்பால் ஈடுபாடுகொண்டுள்ள வேட்பாளர்களை நோக்கி எமது வாக்குகளை அளிக்கவேண்டும். எந்த கட்சியில் இருந்து தமிழ்தேசியத்திற்கு ஆதரவானவர்கள் தெரிவுசெய்யப்படும் போதும், தமிழ் இனத்தின் தேசியப் பிரச்சினையில் அவர்கள் அனைவரும் ஒருங்கே நின்று குரல்கொடுக்கும் தகைமையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

எனவே தமிழ் தேசிய கோட்பாடுகளை உதாசீனம் செய்து, தமிழ் மக்களின் அபிலாசைகளை புறந்தள்ளிய தரப்புகளை இந்த தேர்தலில் தமிழ் மக்கள் நிராகரிப்பதன் மூலம் வரலாற்றில் மறக்கப்படமுடியாத பாடமொன்றை புகட்டமுடியும். தமது பகுதிகளில் உள்ள வேட்பாளர்களில் தமிழ் இனத்தின் விழுமியங்களை சொல்லிலும் செயலிலும் காப்பாற்றும் வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டும்,

நாம் வாக்குகளை தவறாது பயன்படுத்த வேண்டும். அதனை நாம் பயன்படுத்த தவறும்போது, எமக்கு எதிரான சக்திகள் குறைந்த வாக்குகளுடன் வெற்றிபெறுவதை தடுக்கமுடியாது. எனவே எமது வாக்குகளை தவறாது பயன்படுத்துவதுடன், மூன்று விருப்பு வாக்குகளையும் பயன்படுத்தி இனத்தின் விடுதலைக்கு வலுச்சேர்க்கும் உறுப்பினர்களை தெரிவுசெய்யும் தேசியக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என  அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம் அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றது.

நிர்வாகம்.

அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம்.

  1. 07. 2020