தமிழ்நாடு சிறைகளை கண்காணிக்க ட்ரோன் கமராக்கள்

தமிழ்நாடு மத்திய சிறைச்சாலைகளின் வளாகங்களை கண்காணிக்க விரைவில் ட்ரோன் கமராக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மத்திய சிறைச்சாலைகளின் வளாகங்களை விரைவில் ஆளில்லா ட்ரோன் கமராக்களைப் பயன்படுத்தி கண்காணிக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் சிறைச்சாலைகளை கண்காணிப்பதற்கு ட்ரோன்களைப் பயன்படுத்துவது இதுவே முதன்முறை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஆண்களுக்கு 9 மத்திய சிறைகளும், பெண்களுக்க 4 சிறப்பு சிறைகளும் உள்ளன. 13,000 இற்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகளும், தண்டனைக் கைதிகளும் உள்ளனர்.

இந்த சிறைச்சாலைகளில் வேலூர், திருச்சி, கோயம்புத்தூரில் உள்ள 3 சிறைகளும் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. மீதமுள்ள சிறைகள் 20 முதல் 45 ஏக்கர் பரப்பளவில் உள்ளன.

சிறைகளில் ஆள் பற்றாக்குறை இருப்பதால், குற்றவாளிகள் குறிப்பாக அதிக ஆபத்துள்ள சிறை அறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களை உன்னிப்பாக கண்காணிப்பது கடினமான பணியாக உள்ளது.

ட்ரோன்கள் வாங்குவதற்காக 21.85 இலட்சம் ஒதுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான கேள்வி கோரல் விடுக்கப்பட்டுள்ளது.

சிறைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்கள் செயலிழந்து விட்டன. இத்தகைய சூழ்நிலையில் சிறை வளாகத்தை உன்னிப்பாக கவனித்து கவலரம் போன்ற சூழ்நிலைகளில் உடனடியாக நடவடிக்கை எடுப்பது கடினமான பணியாக இருக்கும். அதனால் சிறைக்குள் சட்டவிரோதமாக பொருட்கள் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் எனவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.