தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்க முடியாது

கடந்தகால தவறுகளைத் திருத்திக் கொள்ளாது மீண்டும் தங்களுக்கு மக்கள் ஆணை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவதானது, ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சித் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடகவியலாளர்கள் அமையத்தில் சமகால அரசியல் நிலைமைகள் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பில் சில தினங்களுக்கு முன்னர் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 20 நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் எனக் கூறியிருக்கின்றனர்.

யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் 10 வருடங்கள் மக்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். அத்துடன் எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிடைத்திருந்தது.

கடந்த 10 வருடங்களாக இவ்வாறான கோரிக்கையை விடுக்காதது  எதற்காக? என்ற கேள்விக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இன்றுவரை பதிலளிக்கவில்லை. இப்போது பேரம் பேசும் பொறுப்பைக் கேட்கின்றனர்.

கிடைத்த சந்தர்ப்பங்களைத் தவறவிட்டுவிட்டு தற்போது பேரம்பேச சந்தர்ப்பம் கேட்பது தங்களின் பாராளுமன்ற ஆசனங்களுக்காகவே என்றார்.