‘தமிழ்த் தேசியக் கட்சி சிறிய சூறாவளி’

தமிழீழ விடுதலை இயக்கத்திலிருந்து (டெலோ) நீக்கப்பட்டவர்கள், பிரிந்து சென்றவர்கள் ஆரம்பித்து “தமிழ்த் தேசியக் கட்சி” எமக்கு சிறிய சூறாவளி தாக்கம் மட்டுமேயாகுமெனத் தெரிவித்துள்ள டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், எப்போதும் பலமாகவே, டெலோ இருக்கிறது. ஆகையால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில், யாழ்ப்பாணத்திலிருந்து ஒருவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கும் என்றார்.

யாழ்ப்பாணம், நாவலர் மண்டபத்தில் ரெலோ கட்சியை சேர்ந்த உறுப்பினர்களுடன் இன்று (15) கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்த, செல்வம் அடைக்கலநாதன், அதற்காக, கட்சியின் தொண்டர்கள் ஒத்துழைக்கவேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கு முன்னின்று செயற்பட்டது எமது கட்சி மட்டுமேயாகுமெனத் தெரிவித்த அவர், எமது கட்சியிலிருந்து எங்களை உருவாக்கிய, எம்மை வழிநடத்திய முன்னாள் பொது செயலாளர் சிறிகாந்தா, சிறிய விடயத்துக்காக பிரிந்துள்ளமை கவலையளிக்கின்றது. தமிழரசுக் கடசியின் மீதுள்ள கோபத்தில் அவர்களுடன் இணைந்து செயற்பட முடியாதென தனிக் கட்சியை ஆரம்பித்துள்ளார். இது எமக்கு வருத்தத்தை தருகின்றது என்றார்.

“தமிழ்த் தேசியக் கடசிகள் ஐந்தும், முன்னரைப் போல இணைந்து மிக பலமாக செயற்பட வேண்டும் என்பதேயாகும். நாம் ஒற்றுமையையே விரும்புகின்றோம். அப்படியானால்தான் எதிர்வரும் பொதுத் தேர்தலில் 22 ஆசனங்களை எம்மால் பெற முடியும். இதனை விடுத்து தமிழர்களிடையே புதுப்புது கட்சிகள் உருவாகும் போது, வாக்குகள் சிதறும். இதனால் தென்னிலங்கையில் உள்ள சிங்கள கட்சிகள் ஆளுமை காலூன்றும் நிலைமை உருவாகும். அவ்வாறு நடக்குமேயானால் தமிழர்களின் பூர்விகமாக வடக்கு, கிழக்கு பிரதேசம் கேள்விக் குறியாகும்” என்றார்.

“நாம், வாழ்ந்த வரலாற்றுகள் மழுங்கடிக்கப்படலாம். சிறிகாந்தா, போய் விட்டார் என்பதற்காக, ரெலோ பலவீனம் அடையவில்லை. எமது கடசி பலமாகவே உள்ளது. அவர் கட்சி தொடங்குவது அவரின் ஜனநாயக உரிமையாகும்” என்றார்.

“ரெலோவிலிருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட தெரிவாகவில்லை என்ற கருத்தை முறியடித்து, இம்முறை எமது கடசியிலிருந்தும் ஒருவரை அனுப்பி வைக்க வேண்டும். அதற்காக உறுப்பினர்கள், தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும்” என்றார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு, கடந்த ஜனாதிபதித் தேர்தலில், மக்கள் வாக்களிக்கவில்லை. புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர், சஜித் பிரேமதாஸவுக்​கே, வடக்கு மக்களில் பெரும்பாமையானோர் வாக்களித்தனர். ஜனாதிபதியாக்கும் அதிகாரம் தமிழர்களுக்கு இருக்கக் கூடாது என்பதற்காக, சிங்கள மக்கள் ஓரணியில் திரண்டு, கோத்தாபயவுக்கு வாக்களித்தனர் எனத் தெரிவித்த அவர், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில், நாம் ஒற்றுமனையுடன் பலமாகச் செயற்பட வேண்டும் என்றார்.