தேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் அரணாக நிற்கும்(நேர்காணல்)

‘தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் மக்கள் அரணாக நிற்கும்.தமிழ் மக்களுக்கு கூட்டடமைப்புடன் சிலவிடையங்களில் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் கூட,மக்களின் ஆணை நிச்சயம் எமக்கு கிடைக்கும்’ என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பிரதான வேட்பாளருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் இலக்கிற்கு வழங்கிய நேர்காணல்

கேள்வி – எதிர்வரும் தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பின் வெற்றிக்கான வாய்ப்புகள் எவ்வாறு உள்ளன ?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரலாற்று தன்மை கொண்டது. காரணம் எமது தேசியத் தலைவரின் அங்கீகாரத்தோடு உருவாக்கப்பட்டது. நிச்சயமாக தமிழ் மக்களின் பலத்தோடு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்கூட எமது மக்களின் ஆணை நிச்சயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைக்கும்.

அந்த அடிப்படையிலே இம்முறை வன்னி மாவட்டத்திலே 5 ஆசனங்களை நிச்சயமாகப் பெறுவோம். மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கம் தான் நிற்கிறார்கள் என்பது இந்தத் தேர்தலிலே உறுதி செய்யப்படும். நாடாளுமன்றத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 21 அல்லது 22 ஆசனங்களை பெற முயற்சிப்போம். எங்கள் மக்கள் எங்களோடு தான் நிற்கிறார்கள் என்பதையும் இந்த தேர்தலிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துகின்ற நிலை ஏற்படுகின்ற போதிலும் தேசியத் தலைவரின் சிந்தனை எம்மிடமுண்டு என்பதையும் இது எடுத்துக் காட்டும்.

இன்று தென்னிலங்கை எமது மக்களை பிரித்தாளக்கூடிய சுயேட்சைக் குழுக்களை களம் இறக்கியுள்ளது. அத்துடன் எமக்கு எதிரான தமிழ்க் கட்சிகள் , சிங்களக் கட்சிகளுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் நிலை உள்ளது என்பதை நான் இங்கே சொல்லிக் கொள்ள வேண்டும். வன்னி மாவட்டத்திலே 27 சுயேட்சைக் குழுக்கள் களமிறங்கியிருக்கின்றதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் எங்களின் மக்களின் அரணாக நிச்சயமாக செயற்படும். ஏனையவர்கள் இந்த வாக்குகளை பிரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் செயற்பாட்டைத் தான் மேற்கொள்ளப் போகிறார்கள்.

சில கருத்து வேறுபாடுகள் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது மக்களுக்கு கோபம் இருந்தாலும், நிச்சயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் தங்கள் குரலாக அரணாக இருக்கும்.

தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் மக்கள் அரணாக நிற்கும். இந்த விடயம் தேர்தலுக்காக சொல்லப்படுகின்ற விடயமல்ல. உண்மையான யதார்த்தமான விடயமாக எடுத்துச் சொல்கின்றோம். விடுதலைப் புலிகள் தங்கள் அரசியல் பரப்புரை மூலம் 22 ஆசனங்களை எங்களுக்கு பெற்றுத் தந்தார்கள். அதை நாங்கள் நிரூபிக்க முடியும்.

கிழக்கிலுள்ள பத்திரிகையாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க முனைப்பு காட்டியிருந்த போது, நான் வன்னிக்கு சென்று தேசியத் தலைவர் அவர்களை சந்தித்து அந்த அங்கீகாரத்தைப் பெற்றவன் என்ற முறையில் அதற்கு நான் சாட்சியாக முடியும். ஆகவே அதை பலவீனப்படுத்த முடியாது. ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள். பலன் தருவார்கள். அந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒருபோதும் தமிழர்களின் இறையாண்மையை விட்டுக் கொடுக்காது. ஆதரிக்கும். அப்படியான ஒரு செயற்பாட்டையே நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.

எங்களின் மக்களை எந்தவிதத்திலும் விட்டுக் கொடுக்காத ஒரு செயற்பாட்டையே நாங்கள் மேற்கொண்டு வந்தோம். இன்று மக்கள் சார்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியாயம் கேட்கின்றது என்று சர்வதேசம் சொல்லும் அளவிற்கு நாங்கள் நிலைமையை மாற்றியிருக்கின்றோம்.

நாங்கள் சிங்கள தேசத்திடம் இனி நியாயம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இன்று இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாகவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் சர்வதேசம் பதில் சொல்லும் நிலைக்கு நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம்.

அந்த வகையிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியான வகையில் மக்களின் இறையாண்மையுடன் கடமையாற்றும். அந்த வகையில் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவார்கள். எங்களுக்கு பலம் தந்தவர்கள் மக்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் மக்களுக்காக பயணிக்கும்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலே ஏனையவர்களை புறந்தள்ளி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் பலமாக நிச்சயம் வெற்றி பெறும்.

கேள்வி -உங்கள் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் கோடீஸ்வரன் அவர்கள் தற்போது தமிழரசுக் கட்சிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். அவர் அப்படி உள்வாங்கப்பட்டால் எதிர்ப்போம் எனக் கூறியிருந்தீர்கள். இப்போது என்ன மனநிலையில் இருக்கின்றீர்கள்?

இந்தக் கருத்தை இங்கு சொல்ல முடியாது. ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாகப் பயணிக்க வேண்டும். அந்த வகையில், எங்கள் கட்சியைக் கூட்டி இறுதி முடிவை எட்ட இருக்கின்றோம். அதனால் அது பற்றி இங்கு கூறமுடியாது.

கேள்வி – உங்களுடன் இருந்த பலர் இன்று விக்னேஸ்வரன் ஐயாவுடன் இணைந்து போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது. இது உங்களுக்கு ஆபத்தாக அல்லது உங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கின்ற ஒரு செயற்பாடாக அமையாதா?

அது அவர்களின் சிறுபிள்ளைத் தனமான செயற்பாடு. அவர்களை வெளி உலகிற்கு காட்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அதை வைத்து தாங்கள் பெரியவர்கள் என்று எண்ணுகின்றனர் நிச்சயம் தோல்வியைத் தழுவுவார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் வரையும் தான் அவர்களின் நிலைப்பாடு, சிந்தனை, வெற்றிவாகை எல்லாம் இருக்கும்.

போகின்றவர்களை நாங்கள் தடுக்க முடியாது. இருந்தாலும் அவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான். அந்த அங்கீகாரத்தை அவர்கள் பெற்றுக் கொண்டு தாங்கள் பெரியவர்கள் என நினைத்து செல்பவர்களுக்கு மக்கள் நல்லதொரு பாடத்தைப் புகட்டுவார்கள் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.