தமிழீழத்தின் வெளியுறவு அமைச்சர் என்ற கோணத்தில் சிவராமின் வகிபாகம் ஆராயப்படவேண்டும்- ஜெயா

ஈழப்போர் மூன்று என்று வருணிக்கப்படும் போரின் முடிவுக்கான காலப்பகுதியில், அதாவது 2001 நோக்கிய பேச்சுவார்த்தைச் சூழலை அண்மித்த காலத்தில், தமிழர்களுக்கு உகந்த வகையிலான புறச் சூழலைக் கட்டமைப்பதற்கு ஏதுவாக ஒரு கருத்துநிலையை சர்வதேச ரீதியாக வலியுறுத்தவேண்டியிருந்தது.

இராணுவ ரீதியாக விடுதலைப் புலிகளைத் தோற்கடித்துவிட முடியாது என்ற எண்ணக்கருவே அது. தென்னிலங்கைச் சிங்கள வட்டாரங்களில் மட்டுமல்ல, சர்வதேசத் தரப்புகள் மத்தியிலும் இக்கருத்தைத் தோற்றுவிப்பதில் சிவராமின் பங்கு விஞ்ஞானபூர்வமானதாக இருந்தது.

அவர் தனது பெயரில் பகிரங்கமாகக் கொழும்புப் பத்திரிகைகளில் எழுதிவந்த இராணுவ ஆய்வுப் பத்தி ஒரு தளம் என்றால், மறு தளத்தில் தமிழ்நெற்றின் வளர்ச்சி பங்களித்தது.

தமிழ்நெற்றில் இணைந்து பணியாற்ற அவர் ஆரம்பித்தது 1997 ஒக்ரோபர் மாதத்தில். தமிழ்நெற்றில் அவர் ஈடுபட்டிருப்பது ஆரம்பத்தில் நேரடியாக உரிமை கோரப்படாத ஒன்றாகவே இருந்தது. இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஆறாம் சட்டத்திருத்தம் ஈழத்தமிழர் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதால் அதன் கட்டுகளுக்கு உட்படாத செய்தி நிறுவனமாகத் தமிழ்நெற் இருக்கவேண்டும் என்ற கொள்கையைச் சிவராம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருந்தார்.

தான் இணைந்து ஒரு சில மாதங்களுக்குள்ளேயே சர்வதேசக் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு செய்திநிறுவனமாக தமிழ்நெற் வளர்ச்சிபெறும் வகையில் அவர் பங்காற்றியிருந்தார். தனது சுதந்திரமான இறுதி மூச்சுவரை எமது ஆசிரியர் குழாத்தில் தொடர்ந்து ஏழுவருடங்களுக்கும் மேலாக இயங்கிய மூத்த ஆசிரியர் அவர்.

சமாதானக் காலத்தில் இரண்டு தரப்புகளுடனும் பேச்சுவார்த்தைகளுக்கான இராஜதந்திரத் தொடர்பாடலில் ஈடுபட்டிருந்த சர்வதேசப் பிரதிநிதிகள் தமிழ்நெற்றை வாசித்துக்கொண்டே தம்மை அணுகியதைத் தாங்கள் நேரடியாகக் கண்ணுற்றபோதே அதன் முக்கியத்துவத்தைத் தாங்கள் முழுமையாக உணர்ந்துகொண்டதாக விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்கள் பின்னாளில் சொல்லக் கேட்டிருக்கிறேன்.media col kili 05 தமிழீழத்தின் வெளியுறவு அமைச்சர் என்ற கோணத்தில் சிவராமின் வகிபாகம் ஆராயப்படவேண்டும்- ஜெயாஒரு போரின் வெற்றியைப் பலமடங்காக்கும் தன்மை தகவற்போருக்கு உண்டு. போரின் போது மட்டுமல்ல, பேச்சுவார்த்தைக் காலத்திலும் தகவற் போர் வேறு வடிவங்களில் நீண்டு செல்லும். இந்த வகையில் தமிழீழத்தின் தகவற்போரை தென்னிலங்கை மற்றும் வெளிநாட்டுத் தளங்களில் போரின் போதும், பேச்சுவார்த்தை நோக்கிய நிலைமாற்றத்தின் போதும், பின்னர் பேச்சுவார்த்தையின் போதும் நுணுக்கமாகச் செதுக்கியதில் சிவராமின் பங்கு மிகவும் முக்கியமானது.

குறிப்பாக, புவிசார் அரசியல் கொண்டுவரும் சவால்கள் பேச்சுவார்த்தைக்குள் இரண்டறக் கலந்து சிக்கலாக எழப்போவதை முற்கூட்டியே உய்த்துணர்ந்தவராக, வரமுன் காப்போனாக சிவராம் விரைந்து செயற்படலாகினார்.

இந்தவகையிலேயே, ஈழத்தமிழர் தேசத்தின் இராஜதந்திர நகர்வாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும் என்ற எண்ணக்கரு அவரிடம் உதித்தது. அதற்குத் தமிழ்நெற்றும் இரண்டு வகையில் தளமாகப் பயன்பட்டது. கூட்டமைப்பு உருவாக்கத்திற்கான ஊடகக் கருத்துருவாக்கத்தை மேற்கொள்வதற்கும், அந்தப் பணியைச் செவ்வனே செய்து முடிப்பதற்கு அவருக்குத் தேவையான சுயாதீனமான செயற்படுதளமாகவும் எமது செய்திநிறுவனத்தின் வளங்கள் பயன்பட்டன. அதேவேளை பல சுயாதீனமான ஆளுமைகளை ஒருங்கிணைத்து கூட்டமைப்பை உருவாக்கும் நகர்வைத் தான் உரிமை கோராமலே அவர் மேற்கொண்டார்.

தேவை ஏற்பட்ட போது கூட்டமைப்பு உருவாக்கத்துக்குக் குந்தகமாகச் செயற்பட்ட சில மூத்த அரசியல்வாதிகளை கொள்கையின் பால் அடிபணிய வைக்கவும் சிவராம் தமிழ்நெற் செய்தி உருவாக்கத்தைப் பயன்படுத்தியமை எனக்கு நினைவிருக்கிறது.

அவர் எடுத்துக்கொண்ட அடுத்த முனைப்புகளில் ஒன்று 2009 இற்குப் பின்னர் முக்கிய பணியாற்றிய இயக்கமாகப் பின்னாளில் பரிணாமம் கண்டது. சர்வதேச மட்டத்தில் ஈழத்தமிழர் மீது நடைபெற்றது இன அழிப்பு என்று டிசம்பர் 2013 இல் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்குவதற்கான ஓர் இயக்கத்தின் அடித்தளமே அது. சிவராம் தனது கூட்டொருமை மூலம் ஒன்றிணைத்திருந்த சிங்கள நண்பர்கள் இயக்கிய இயக்கமே இதைச் சாதித்தது.

தென்னிலங்கையில் சர்வதேச சக்திகளதும் சிங்கள பௌத்த பேரினவாதிகளதும் போக்குகள் குறித்த கூர்மையான பார்வையோடிருந்த சிவராம், சர்வதேச சக்திகள் சிங்கள பௌத்த பேரினவாதிகளோடு உறவுகொள்ளும் ஆபத்து வரப்போவதை முற்கூட்டியே உணர்ந்தவராக, சிங்கள முற்போக்குச் சக்திகளை அணிதிரட்டும் அந்தப்பணியைத் திட்டமிட்டார். விளைவாக, ஒக்ரோபர் 2003 இல் கொழும்பில் ஒரு சிங்கள-தமிழ் கலைக்கூடல் நடாத்தப்பட்டது. இந்தக் கலைக்கூடல் மீது சிங்கள பௌத்த இனவாதிகள் தாக்குதல் நடாத்தினர். இந்தத் தாக்குதலை அந்நிகழ்வில் பங்குபற்றியோர் துணிகரமாக எதிர்த்தனர். இந்த நிகழ்வு அந்த அரசியல் வெளியை மேலும் கெட்டியாக்கியது.unnamed 1 தமிழீழத்தின் வெளியுறவு அமைச்சர் என்ற கோணத்தில் சிவராமின் வகிபாகம் ஆராயப்படவேண்டும்- ஜெயாஈழத்தமிழர் மீதான இன அழிப்பை சர்வதேச மட்டத்தில் ஒரு தீர்ப்பாயம் ஊடாக 2009 இற்குப் பின்னர் நிறுவுவதற்கான அடித்தளத்தை மட்டுமல்ல, போர்க்குற்றங்கள் குறித்து வெளியான முக்கியமான ஆவணங்களைச் சர்வதேசத் தளத்திற்குக் கொண்டுவர உதவிய பாசன அபயவர்தன போன்ற சிங்கள நண்பர்கள் இந்த இயக்கத்துக்குப் பெரும் பங்காற்றியுள்ளனர். இதன் வெற்றிக்கு சிவராமுக்கும் ஜேர்மனியின் பிரேமனில் வதியும் சிங்கள நண்பரான விராஜ் மெண்டிசுக்கும் இடையே நிலவிய நீண்ட நாள் நட்பும் ஒரு முக்கிய காரணியாகும். அயர்லாந்தின் டப்ளின் நகரில் வதியும் பேராசிரியர் ஜூட் லால் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது.

இதைப் போலவே சிவராம் வேறு பல நகர்வுகளுக்கான அடித்தளங்களையும் இட்டார். நோர்த் ஈஸ்டேர்ன் ஹெரால்ட் என்று மாதமிருமுறை வெளிவரும் பத்திரிகையையும் சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தில் அவர் ஆரம்பித்தார். பின்னர் அது சரியாகப் பயணிக்கவில்லை என்று கவலை கொண்டிருந்தார். ஒரு தமிழ்ப்பத்திரிகையை ஆரம்பிக்கவேண்டும் என்ற விருப்பும் அவருக்கிருந்தது. அதேபோல, சர்வதேச ரீதியாக தமிழ்மொழியிலான ஓர் ஊடகத்தைப் பலப்படுத்தவேண்டும் என்ற அவாவும் அவரிடம் இருந்தது.

வீரகேசரிப் பத்திரிகையில் ஆசிரியராகக் கடமையாற்றிய அவரது நீண்டநாள் நண்பர் வீ. தேவராஜ் சிவராமின் பத்திகளை தமிழில் வெளியிடுவதில் துணிச்சலோடு செயற்பட்டார்.

தாயகத்தில் தமிழர்களிடையேயும், சிங்கள முற்போக்குச் சக்திகளிடையேயும் அவரால் இடமுடிந்த அடித்தளத்தைப் போல புலம் பெயர் சூழலில் தேசக் கட்டலுக்கான நகர்வுகளை அவரால் மேற்கொள்ளமுடியவில்லை. அவ்வாறு நகர்த்தவிடாமல் முடக்குவதில் புலம்பெயர் சூழலில் அப்போதிருந்த சில ஆளுமைகள் தீவிரமாயிருந்தன என்பது கவலைக்குரியது.

ஈழத்தமிழர்களின் தேசக் கட்டலில் சிவராமால் மட்டுமே சாதிக்கமுடியும் என்று சில விடயங்கள் இருந்தன. அவை எல்லாவற்றையும் சாதிக்கமுடியாமல் அவரது உயிர் 46வது அகவையிலேயே பறிக்கப்பட்டுவிட்டது.

அவரிடமிருந்த முனைப்புகளில் சிலவற்றை எஸ்.எல்.எம் ஹனிபா, விராஜ் மெண்டிஸ் மற்றும் பாசன அபேவர்த்தன போன்றவர்கள் பின்னாளில் தமிழ்நெற்றுடனான நேர்காணலிலும் சிவராம் நினைவுநிகழ்வுகளிலும் சுட்டிக் காட்டியிருப்பர்.

இதைப் போல பல விடயங்களை தமிழ்நெற்றின் உள்வட்டாரத்துக்குள் கூட்டொருமையோடு அவர் வெளிப்படுத்தியிருந்தார். தமிழீழமே அழிக்கப்பட்டாலும் அதை எவ்வாறு மெய்நிகர் நிலையில் மீளுருவாக்கம் செய்யலாம் என்பது கூட அதில் உள்ளடங்கியிருந்தது.

ஆக, மாமனிதர் சிவராமின் தமிழ்த்தேசிய எழுச்சிக்கான ஒட்டுமொத்தமான பங்களிப்பையும் விளங்கிக்கொள்ளவேண்டும் என்றால் தமிழீழத்தின் முதலாவது முடிசூடா வெளிநாட்டமைச்சர் என்ற கோணத்தில் அவரை அணுகவேண்டும்.

மாமனிதர் சிவராம் அவர்களுடன் தமிழ்நெற் ஊடகமூடாகவும் நேரடியாகவும் நெருங்கிப் பழகியவர் எனும் வகையில் அவரின் தமிழ்த் தேசிய எழுச்சிக்கான பங்களிப்பைச் சுருக்கமாகக் குறிப்பிட முடியுமா என்று இலக்கு இதழ் தமிழ்நெற் ஆசிரியர் ஜெயாவிடம் கேட்டிருந்தது. இது தொடர்பில் அவர் எமக்கு வழங்கிய கருத்தாக்கமே இது.