தமிழில் தேசிய கீதம் பாடுவது – தமிழ் அரசியல்வாதிகளின் கருத்துக்கள்

தேசிய கீதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு அரசியலமைப்பில் இருப்பதாகவும், அதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழில் தேசிய கீதம் பாடுவது தொடர்பாக அண்மைக் காலங்களில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் தொடர்பாக அவர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.

எதிர்வரும் சுதந்திரதினக் கொண்டாட்டம் பெப்ரவரி 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இந்த கொண்டாட்டத்தின் போது தனிச் சிங்ளகத்தில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என பொதுநிர்வாக அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு தமிழ்க் கட்சித் தலைவர்களும், தமிழக தமிழ் அரசியல்வாதிகளும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

தமிழ் மக்கள் தங்கள் தாய்மொழியில் தேசிய கீதத்தைப் பாடுவதன் மூல தேசிய உணர்வைப் பெற்றுக் கொள்வார்கள். அப்படியில்லாதவிடத்து தேசிய கீதம் பாடுவதில் அர்த்தமேயில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர்களை தமிழில் தேசிய கீதம் பாடுவதை தடுப்பதானது அவர்களை பாரபட்சமாக நடத்துவதை உணர்த்தும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில், இவ்வாறான நடவடிக்கை இடம்பெற்றால் பல்லின மக்களிடையே பிளவுகள் ஏற்படும் என தெரிவித்தார்.

sivaji 2 தமிழில் தேசிய கீதம் பாடுவது - தமிழ் அரசியல்வாதிகளின் கருத்துக்கள்அவர் மேலும் தெரிவிக்கையில், அரசு இந்த நிலைப்பாட்டில் இருக்குமானால், தமிழ் மக்கள் அன்றைய தினத்தை தேசிய துக்க தினமாக அனுஸ்டிக்க நிர்ப்பந்திக்கப்படுவார்கள். குறிப்பாக வடக்கு கிழக்கில் அரச, தனியார் திணைக்களங்கள், பாடசாலைகள் போக்குவரத்து சேவைகள் என அனைத்தும் முடக்கப்படும். மாபெரும் கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த நாடு பௌத்த சிங்கள நாடு என்று கூறுகின்றனர். அப்படியானால் தமிழர்கள், முஸ்லிம்கள், மலையக மக்கள், கிறிஸ்தவ சிங்களவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனரா? எமக்கு இந்த நாட்டில் வாழ உரிமை இல்லையா? இது மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும்.

சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் தான் நிங்கள் தேசிய கீதம் பாடுவீர்களானால் வடக்கு கிழக்கில் தேசிய துக்க தினம் அனுஸ்டிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.