தமிழில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் – மனோ கணேசன் கோரிக்கை

நாளை நடைபெறவுள்ள சுதந்திரதின விழாவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் சிறிலங்கா ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாளை நடைபெறவுள்ள சுதந்திரதின நிகழ்வில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது தெரிந்ததே.

இதற்கு பலரும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தனது ருவிற்றர் பக்கத்தில் இந்த அறிவிப்பை பகிரங்கமாக விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறித்த பதவில் ”முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்ஸவிடம் இந்த கடைசித் தருணத்திலாவது நல்ல முடிவை நீங்கள் எடுக்க ணேவண்டும் என கோர விரும்புகிறேன்.

சுதந்திரதின வைபவத்தில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படும் கடந்த நான்கு வருட நடைமுறையை உங்கள் நிர்வாகம் மாற்றிவிடக் கூடாது என நான் விரும்புகின்றேன். தமிழ் மொழியில் பாடப்படும் தேசிய கீதம் என்பது இன்னொரு வழமையான பாடல் அல்ல.

அது தமிழ் பேசும் இலங்கையர்களின் அடையாளம். இதுதான் இன்றைய காலகட்டத்தின் தேவை என பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.