தமிழினத்தை கருவறுக்கும் 5ஜி(நேர்காணல் சென்ற வார தொடர்ச்சி)

ஆறு அதிகார சபைகளின் அனுமதிகள் பெறப்பட்டே சிமாட் லாம் போல்கள் நிர்மானிக்கப்படலாம். ஆனால் அதன் பெயரில் நிர்மானிக்கப்பட்டு வரும் கோபுரங்களை அமைப்பதற்கு கூட எவ்விதமான ஒழுங்குவிதிகளும் பின்பற்றப்படாது யாழ்.முதல்வரின் அதிகாரம் பாய்ந்து செல்கின்றது என தமிழர் கல்வித்துறைக்கு அரும்பணியாற்றி யாழ்.மாவட்டத்தில் மட்டுமன்றி நாடாளவிய ரீதியில் தனக்கென்று தடம்பதித்திருந்த பொருளியல் ஆசான் மறைந்த வரதாராஜனின் புதல்வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினருமான வ.பார்த்திபன் இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார். அச்செவ்வியின் இரண்டாவது பகுதி வருமாறு

கேள்வி:- இந்த விடயங்களை சபையின் கவனத்திற்கு நீங்கள் கொண்டு சென்றிருக்கவில்லையா?

பதில்:– முன்னதாக 19-06-2019 அன்று சிமாட் லாம் போல்கள் பூட்டப்படுகின்ற இடங்களில் மக்கள் தமது பலத்த எதிர்ப்பை வெளிகாட்டி வருகின்றனர். உதாரணமாக நல்லூர் செட்டித்தெருவில் குறித்த இடத்தில் அதனை பூட்டுவதற்கும் மிக கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். எனவே இது பற்றி விவாதித்து மக்களுக்கு தெளிவூட்ட வேண்டும். ஏன் என்றால் அபிவிருத்தி என்பது மக்களின் விருப்பப்படி மக்களின் பங்களிப்புடன் நடைபெற வேண்டியது என்ற நிலைப்பாட்டில்  சிமாட் லாம் போல்கள் அமைப்பது தொடர்பான 18 இடங்களையும் சபையில் தெரிவித்து அதற்கான அனுமதியினை பெற்று அதன்பிறகே பொருத்துமாறு கோரினோம். ஆனால் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.

சிமாட் லாம் போல்களுக்குரிய நிறுவனத்திற்கும் யாழ்.மாநகர சபைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் நான்காவது பந்தியில் மேற்படி சிமாட் லாம் போல்களில் சிறிய ரக செலுனர் அன்ரனாக்கள் பூட்டப்படும் என்று உள்ளது. இந்த அன்ரனாக்கள் தொடர்பாக மேலதிக தகவல்கள் மற்றும் தொழில்நுட்ப அறிக்கை ஆகியவற்றையும் சபையில் கோரியிருந்தோம். ஆனால் அதுவும் எங்களுக்கு தரப்படாமலேயே சிமாட் லாம் போல்கள் அமைக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

மேற்படி சிமாட் லாம் போல்களில் கமராக்கள் பூட்டப்படுகின்றன. அது மிகவும் அத்தியாவசியமான விடயம். ஆனால் தற்போது அமைக்கப்பட்டு வருகின்ற சிமாட் லாம் போல்கள் சன நெருக்கடியான குடியிருப்புக்களுக்கு மத்தியில் அமைக்கப்படுகின்றன. இவ்வாறு பூட்டப்படும் கமராக்களின் மூலம் குடியிருப்புக்களில் வாழ்கின்ற மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையும்

எனவே மேற்படி காரணங்கள் தொடர்பாக ஆராய்ந்து முடிவெடுப்பது தொடர்பிலும் மற்றும் மக்கள் சிமாட் லாம் போல்கள் அமைக்கும் இடங்கள் தொடர்பில் பலத்த ஆட்சேபனைகளை தெரிவித்து வருவதனாலும் உடனடியாக விசேட பொதுக் கூட்டத்தினை ஒழுங்குபடுத்துமாறு கேட்டுக்கொண்டோம்.

அதே நேரம் அவ்வாறு விசேட பொதுகூட்டம் ஒழுங்குபடுத்த முடியாது விடில் ஜுலை மாதம் 18ஆம் திகதி நடைபெற இருந்த மாதாந்த பொதுக்கூட்டத்தில் இதுபற்றி ஆராய்வதற்கான நேரத்தை ஒதுக்கித்தருமாறும் அது வரைக்கும் யாழ்.மாநகர சபை எல்லைக்குள் முன்னெடுக்கப்பட்டு வரும் சிமாட் லாம் போல்கள் அமைக்கும் செயற்பாடுகளை உடன் நிறுத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் மாநகர முதல்வரிடம் கோரிக்கை விட்டிருந்தோம்.

விசேட பொதுக்கூட்டம் ஒன்றினை ஒழுங்குபடுத்துவது மற்றும் சபையில் மேற்கூறப்பட்ட விடயப்பரப்புக்கள் விவாதிக்கப்பட்டு மக்கள் நலம்சார்ந்து மக்களின் விருப்பத்தை அறிந்து அவர்களின் அனுமதியுடன் குறித்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக முடிவு எட்டும் வரை குறித்த திட்டத்தை நிறுத்திவைப்பதற்குரிய கடிதமும் யாழ்.மாநகர சபையிடம் கையளிக்கப்பட்டது.

எனினும் அடுத்த மாநகர சபை கூட்டத்திற்கு முன்னதாக மாநகர முதல்வர் ஊடகவியலார் மாநாடொன்றைக் கூட்டி மக்களின் விழிப்புணர்வுக்கான நாம் முன்னெடுத்த அனைத்து நடவடிக்கைகளையும் விமர்சித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை எம்மீது அடுக்கி விட்டார்.

கேள்வி:- மாநகர சபையின் அமர்வு இடம்பெற்றதா? சிமாட் லாம் போல்களின் பாதிப்பு குறித்து சுட்டிக்காட்டினீர்களா?

பதில்:- ஆம், ஜுலை 18ஆம் திகதி மாநகர சபையின. அமர்வு நடைபெற்றது. இதன்போது நான் பல்வேறு விடயங்களை சபையின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தேன். அவற்றின் முக்கிய விடயங்கள் சிலவற்றை இங்கு குறிப்பிட விளைகின்றேன். சிமாட் லாம் போல்கள் அமைப்பதற்கான தொடர்பிலான ஒப்பந்தத்தில் அவற்றை அமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மத்திய சூழல் அதிகாரசபை, நகர அபிவிருத்தி சபை, தொலைத்தொடர்பு அதிகாரசபை, விமானப்போக்குவரத்து அதிகாரசபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பிரதேச சுகாதார அதிகாரி ஆகியோரிடமும் அனுமதி பெற்று அதன் பிரதிகள் ஆவணப்படுத்தலுக்காக மாநகர சபையில் சமர்ப்பிக்கவேண்டும் என்றுள்ளது.

ஆனால் அனுமதி பெறப்பட்டதாக கூறப்பட்ட ஆறு அதிகார சபைகளில் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதற்கு அப்பால் பல முரண்பாடுகள் அதில் காணப்படுகின்றன. மே மாதம் இடம் பெற்ற மாநகர சபைக் கூட்டத்தில் கம்பத்தில் பொருத்தப்படும் பொருட்கள் அனைத்திற்கும் மாநகரசபையின் திட்டமிடல் பகுதியில் அனுமதி பெற்று பொருத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. குறித்த கம்பம் அமைப்பதற்கு யாழ்.மாநகர சபை திட்டமிடல் பகுதியில் அனுமதி பெறப்பட்டதா?

தற்போது யாழ்.மாநகர சபை எல்லைக்குள் வெட்டப்படுகின்ற கிடங்குகள் அனைத்தும் யாழ்.மாநகர சபையின் வீதி ஓரங்களில் அதாவது வீதியின் சோல்டர்களில் வெட்டப்படுகின்றன. இதற்கான அனுமதி எவ்வாறு வழங்கப்பட்டது. ஒரு சாமானிய குடிமகன் ஒருவர் தனது வீட்டுக்கு ஒரு மதிலைக்கட்டுவது என்றால் எத்தனையோ படிமுறைகள். ஆனால் இவ்வளவு பெரிய கோபுரம் ஒன்றை அமைக்கும் போது எந்த ஒழுங்குகளையும் பின்பற்றத் தேவையில்லையா?

2019.06.21அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியில் யாழ்.மாநகர சபையின் அதிகாரத்திற்குட்பட்ட வீதிகள், அதனுடைய நீளம் மற்றும் வீதிக் கோட்டு எல்லை என்பன வெளியிடப்பட்டன. உதாரணமாக நல்லூர் செட்டித்தெருவின் வீதிக்கோட்டு எல்லை 20அடி என்று உள்ளது. அதே போல் கஸ்தூரியார் வீதியின் வீதிக்கோட்டு எல்லை 33 அடியாக உள்ளது அவ்வாறு எல்லாம் இருக்கும்போது இரு வீதிகளிலும் வெறும் 10அடிக்குள் குறித்த பாரிய கம்பம் நடுவதற்கு எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது.

மேற்படி கோபுரங்கள் குறித்த இடங்களில் அமைக்கும் போது யாழ்.மாநகர சபையில் அதனுடைய திட்டவரைபினை கொடுத்து அனுமதிச்சான்றிதழ் பெற வேண்டும் என்பது நியதி. அந்த நியதி இத்திட்டத்தில் பின்பற்றப்படவில்லை. இங்கு அமைக்கப்பட்டுள்ள கோபுரங்களின் அடித்தளம் எவ்வளவு உறுதியானது? அதன் அடித்தளத்திற்குரிய ஆழம் எவ்வளவு? அதனுடைய கொங்கிறீட்டின் தடிமன் எவ்வளவு என்பது போன்ற எந்த ஒரு அடிப்படைத் தரவுகள் கூட எம்மிடம் இல்லை.