மகாவலி திட்டத்தால் கிழக்கில் சிங்களவர் தொகை 41 மடங்கால் அதிகரிப்பு – விக்கி

மகாவலி திட்டத்தால் வடக்கும் கிழக்கும் மிக விரைவில் துண்டாடப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி.வி.விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்களின் வாராந்த கேள்விக்கு பதிலளித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மகாவலி திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் குடியேற்ற நடவடிக்கைகள், வடக்கில் தமிழ் மக்களின் குடிசன பரம்பலில் செயற்கையான மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

இதனால் மிக விரைவில் வடக்கும் கிழக்கும் துண்டாடப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

மாறி மாறி ஆட்சிக்கு வரும் இரு பிரதான கட்சிகளுமே தமிழ் மக்களின் இருப்பை அழிக்கும் செயற்பாடுகளில் ஏட்டிக்குப் போட்டியாக செயற்பட்டு வந்திருக்கின்றமை வரலாறு என சி.வி.விக்னேஷ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவற்றில் ஒரு கட்சி மலைப்பாம்பு என்றால் மற்றைய கட்சி விஷப்பாம்பு என்பதே யதார்த்தம் எனவும், ஒன்று விழுங்கும் மற்றையது நின்று கொல்லும் எனவும் எடுத்துக்காட்டியுள்ளார்.

கடந்த சில வருடங்களில் மகாவலி திட்டம் மூலம் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் ஏனைய பகுதிகளில் அபிவிருத்தி என்ற போர்வையில் நில அபகரிப்பும், சிங்கள குடியேற்றத் திட்டங்களும் முனைப்படைந்து வந்திருப்பதாக சி.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.

அத்துடன், வன இலாகா திணைக்களம் மற்றும் தொல்லியல் திணைக்களம் போன்றவை திட்டமிட்ட குடியேற்றங்களுக்கும் நில அபகரிப்புகளுக்கும் துணைபோகும் வகையில் செயற்பட்டு வந்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பௌத்தர்கள் இல்லாத இடங்களில் பௌத்த விகாரைகள் தொடர்ந்து அமைக்கப்பட்டு வருவதோடு, பொதுமக்களின் காணிகளை அபகரித்து அவற்றில் இராணுவம் வியாபாரம் மற்றும் விவசாயத்தில் ஈடுபடுவது தொடர்ந்தும் நடைபெறுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கடல் பிரதேசங்களில் கடற்படையினரின் ஆக்கிரமிப்புகள் இடம்பெறுவதால், உள்ளூர் மீனவர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சி.வி.விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஒரு பௌத்தர் கூட நிரந்தரமாக வாழாத வட்டுவாகலில் பழம்பெரும் ஆலயமான சப்த கன்னிமார் ஆலய வளாகத்தை இராணுவம் இன்று அபகரித்து பௌத்த விகாரை ஒன்றை அமைத்துள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய தமிழ் மாவட்டங்களை நில ரீதியாக இணைக்கும் மணலாறு மற்றும் வவுனியா வடக்கு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடியேற்ற திட்டங்கள் மூலம் மிக விரைவில் வடக்கு கிழக்கு தாயகக் கோட்பாடு உடைத்தெறியப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாவலி திட்டத்தின் ஊடாக, வடக்கு கிழக்கிற்கு நீர் தரப்போவதாக ஆசைகாட்டி ஒரு சொட்டு மகாவலி நீரையும் இதுவரை தராமலே காணிகள் கபளீகரம் செய்யப்படுவதாக சி.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.

மறைந்த பொருளியலாளர் வரதராஜன் மேற்கொண்ட ஆய்வின்படி, 1901 – 2012 ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான கிழக்கு மாகாண சனத்தொகை மதிப்பீட்டை ஆய்வு செய்கின்ற போது, அதன் மொத்த சனத்தொகை 6 மடங்காக அதிகரித்துள்ளது என்றும், ஒப்பீட்டளவில் சிங்கள மக்களின் சனத்தொகை 41 மடங்கினால் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

1901 ஆம் ஆண்டு 55. 8 வீதமாக இருந்த தமிழ் மக்களின் சனத்தொகை 2012 ஆம் ஆண்டு 39.7 வீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி.வி.விக்னேஷ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.