தமிழர் தரப்புக்களிடையே ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களும் ஒருமித்த செயற்பாடுகளும் அவசியம் – மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ

நேர்காணல் இறுதி பகுதி……

சிறீலங்கா அரசு தமிழர்கள் மீது மேற்கொண்ட திட்டமிட்ட இன அழிப்புக்கும்  போர்க்குற்றங்களுக்கும் .நாவின் ஊடாக நீதியைப் பெற்று கொள்ளலாம் என்று நினைக்கிறீர்களா

தாயகத்திலே எமக்கான நீதி கிடைக்க முடியாதென்ற நிலையில் ஐ.நாவினூடாக எமக்கான நீதியை பெற்றுக் கொள்வதற்கான முயற்சியை அநீதிக்குள்ளான ஒரு பேரினம் தன்னாலான முயற்சிகளை நிச்சயம் காத்திரமான முறையில் மேற்கொண்டே ஆக வேண்டும். திட்டமிட்ட முறையில் எமது வளங்களை ஒழுங்குபடுத்தி இடைவிடாத முயற்சியை தமிழர் தரப்பு ஒரே நிலைப்பாட்டோடு மேற் கொண்டால் கால ஓட்டத்தில் எதுவுமே சாத்தியமானதுதான். அதற்கு தமிழர் தரப்புக்களிடையே ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களும் ஒருமித்த செயற் பாடுகளுமே பிரதானமாக இருக்க வேண்டும். சுயநிர்ணய உரிமைகோரி போராடும் இனங்களின் தேசத்தினை தனிநாடாக அங்கீகரிக்க வேண்டுமெனில் ஐ.நா பொதுச்சபையில் மூன்றில் இரண்டு பெருமான்மையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த தமிழர் இனவழிப்பை ஐக்கிய நாடுகள் சபையிலோ அல்லது சர்வதேச நீதிமன்றத்திலோ நிருபிப்பதற்கு என்ன வகையான  பொறிமுறைகள் இருக்கின்றன?

நாம் முதலில் தமிழினப் படுகொலை தொடர்பில் நெதர்லாந்து நாட்டின் கெக் நகரில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும்  சர்வதேச கூட்டணிகளுடன் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அத்துடன் ஜெனீவாவில் உள்ள ஐ.நா சபை பொறிமுறைகள் மட்டுமல்லாது வியன்னா மற்றும் நியூயோர்க் ஆகிய இடங்களிலும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

மேலும் பிராந்திய நிறுவனங்களான ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆபிரிக்க ஒன்றியம் ஆகியவற்றுடனும் ஏனைய பிராந்திய அமைப்புக்களுடனும் இணைந்து செயலாற்ற வேண்டும். இறுதியாக தமிழினப் படுகொலைக்கு தீர்வு காணும் முகமாக ஒவ்வொரு நாட்டு பாராளுமன்றங்களுடனும் இணைந்து வேலைசெய்ய வேண்டிய தேவையுள்ளது. தாயகத்தில் இருந்து பாதிக்கப்பட்ட தரப்பினரும், சாட்சியாளர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் ஒவ்வொரு ஐ.நா மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடருக்கும் வருகைதர வேண்டும். அத்துடன் தமிழர் அமைப்புக்கள் எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும். அத்தோடு ப்ரஸ்செல்ஸ் மற்றும் யெனீவாவில் வசிக்கின்ற இளம் சமுதாயத்தினர் ஆகக்குறைந்தது 25 பேராவது எம்முடன் இணைந்து செயலாற்ற வேண்டிய தேவையுள்ளது.

தற்போது தாயகத்திலே தீவிரமடைந்துள்ள கட்டமைப்புசார் இன வழிப்பை தடுப்பதற்கு .நா மன்றத்தின் மூலமாக எத்தகைய நடவடிக்கைகள் மேற் கொள்ளலாம்?

நாங்கள் ஒவ்வொரு ஐ.நா மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரின் போதும் பக்கவறை நிகழ்வுகளின் ஊடாகவும் எழுத்து மற்றும் வாய்மூல அறிக்கைகள் ஊடாகவும் சர்வதேசத்திற்கு தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு தொடர்பாக தெரியப்படுத்தி வருகின்றோம். அத்துடன் ஐ.நா.சபை சார்ந்த விசேட பிரதிநிதிகளுக்கும் மனித உரிமைகள் ஆணையா ளருக்கும் அனைத்து நாடுகளுக்குமான கால மீளாய்வு பொறிமுறைக்கும் (UPR Process) ஒப்பந்த அடிப்படையிலான நாடுகளு க்கும் தாயகத்தில் இருந்து பெறப்பட்ட அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.

ஐ.நா. மனித உரிமைகள்  சபையின் செயற்பாடுகள் ஒரு வருடத்தில் 250 நாட்கள்  இடம்பெறுகின்றன. ஆனால் நாம் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் இடம்பெறும் காலப்பகுதியில் மாத்திரமே அங்கு செல்கின்றோம். மற்றும் ஐ.நா. சபையின் பிரிவுகளான ஐ.நா. பொதுச்சபை,  ஐ.நா பாதுகாப்பு சபை, ஐ.நா  பெண்கள் அமைப்பு, ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக குழு (ECOSOC) யுனெஸ்கோ, யுனிசெப் மற்றும் ஒலிம்பிக் குழு ஆகிய அனைத்து பொறி முறைகளையும் நாம் உரிய வகையில் பயன்படுத்தி செயற்பாடுகளை முன் னெடுக்க வேண்டும்.

இனப்படுகொலை விடயத்தில் சர்வதேச நாடுகளோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ செய்யத்தவறிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எவை என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

பொதுமக்களின் பாதுகாப்பிற்கான கடப்பாடு என்பது  ஐ.நா பாதுகாப்புச் சபையில் புதிதாகக் கொண்டுவரப்பட்ட ஒரு சர்வதேச பாதுகாப்பு மற்றும் மனித உரிமைக்கான விழுமியம் ஆகும். இவ் விழுமியம் ஆனது சர்வதே அமைப்புக்க ளூடாக ஏற்கனவே இடம்பெற்ற இனவழிப்புக்கள் மற்றும் எதிர்காலத்தில் இனவழிப்பு ஒன்று இடம்பெறாமல் தடுப்பதற்காகவும், போர்க்குற்றம், இனச்சுத்தி கரிப்பு மற்றும் மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை தடுப்ப தற்கே ஏற்படுத்தப்பட்டதாகும்.

இவ் விழுமியத்தின் முதல் தீர்மானமானது தமிழின அழிப்பு இடம்பெற்ற பின்னரே ஐ.நா. பொதுச்சபையில் செப்டெம்பர் 14 2009 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த தீர்மானம் ஆனது (A/RES/63/308) கௌதமாலா நாட்டின் பிரதிகள் மற்றும் 67 உறுப்பு நாடுகளின் இணை அனுசர ணையுடன் அறிமுகப்படுத்தப்பட்டது பாதிக்கப்பட்ட தரப்பாகிய நாம் ஐ.நா பொதுச்சபையுடன் இணைந்து வேலை செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கயை எடுப்பதுடன் சரியான வேலைத்திட்டங்களை சர்வதேச சமூகத்தின் ஊடாக நகர்த்திச் செல்ல வேண்டும். விசேடமாக இத் தீர்மானத்தை அறிமுகப்படுத்திய கௌதமாலா நாட்டுடனும் அதனுடன் இணைந்த செயற்பட்ட உறுப்பு நாடுகளுடனும் ஆழமாக வேலை செய்ய வேண்டும்.

இலங்கை அரசு .நாவின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதனை தமிழர் தரப்பு எவ்வாறு கையாளவேண்டும்.

தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தீர்மானம் மற்றும் கனடா நாடளுமன்றத் தீர்மானங்கள் போன்ற தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு சர்வதேச நாடுகளின் பிராந்திய மற்றும் தேசிய நாடாளுமன்றங்களுடன் இணைந்து தமிழ் உரிமை ஆர்வலர்கள் பணியாற்றல் வேண்டும். இதனூடாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலுள்ள நாடுகளிற்கு ஓர் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான வலுவான முன் முயற்சியெடுக்க அழுத்தம் கொடுக்க முடியும். ஐ.நா முகவர் மட்டத்தில் அதன் தீர்மானங்களையும் செயற்பாடு களையும் ஆதரிக்கக் கூடிய நாடுகளைக்கொண்ட ஓர் குழுவை நாம் உருவாக்க வேண்டும்.

இவ் ஆதரவைப் பெற்றுக்கொள்ள அந் நாடுகளுடனிணைந்து வேலை செய்வதுடன், அதன் பாராளுமன்றங்களில் தமிழினவழிப்பை அங்கீகரிக்கும் தீர்மானங்களை நிறைவேற்றல் வேண்டும் அவ் வகையில் நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதற்கான செயற்பாட்டு வரைபு எம்மிடம் இருத்தல் அவசியம். தமிழீழத்தில் இராணுவ ஆக்கிரமிப்பு குறித்த பாரிய பிரச்சாரம்:

 உயர் பாதுகாப்பு மண்டலம் மற்றும் பொது மக்கள் மீதான அதன் விளைவு

 சிறுவர்கள் மீதான இராணுவ ஆக்கிரமிப்பின்  விளைவு

 பெண்கள் மீது இராணுவ ஆக்கிரமிப்ப்பின் விளைவுகள்

 தமிழர்களின் வாழ்வாதாரங்கள் மீதான இராணுவ ஆக்கிரமிப்பின் விளைவு

30/1, 34/1 மற்றும் 40/1 தீர்மானங்களை செயல்படுத்தாமை தொடர்பான அறிக்கைகள்

தமிழர்கள் ஏன் OMP அங்கீகரிக்கவில்லை என்பது குறித்த அறிக்கை

PTA மற்றும் CTA பற்றிய அறிக்கைகள்

இதில் தமிழ் அரசியல் பிரதிநிதித்துவங்களின் வகிபாகம் மற்றும் நகர்வுகளை எவ்வாறு பார்கின்றீர்கள்?

இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களில் தமிழ் அரசியல் வாதிகளின் எந்தவொரு வகிபாகமும் இருக்கவில்லை. மாறாக மேற்படிதீர்மானங்கள் நிறை வேற்றப்பட்ட பின்னர் மேற்கத்தைய நாடுகளின் ஊடகப் பேச்சாளார்களாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிப்பதன் மூலம் தமிழீழத்தில் இடம்பெற்ற தமிழின அழிப்பினை மறுத்து நிற்கின்றனர்.