தமிழர்களின் தயாகக் கோட்பாட்டடை வலியுறுத்தும் வகையில் எழுக தமிழுக்கு தமிழர்கள் ஆதரவு வழங்கவேண்டும்

வடகிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதை வலியுறுத்தும் வகையில் எழுக தமிழ் நிகழ்வுக்கு கிழக்கு தமிழர்கள் ஆதரவு வழங்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழர் தாயகம் இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளது.நாங்கள் நல்லாட்சியை ஏற்படுத்தியுள்ளபோதிலும் அந்த நல்லாட்சியினால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான விமோசனமும் எட்டாத நிலையே இருக்கின்றது.

எம்மக்கள் மத்தியில் இன்று தமிழ் தேசிய உணர்வு என்பது வெறும் கொங்கிறிட் வீதிகளாகவும் கட்டிடங்களாகவும் மாறிவருகின்றது.எமது இளைஞர்கள் மத்தியில் தமிழ் தேசிய உணர்வு திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டுவருகின்றது.

இவ்வாறான நிலையில் எழுக தமிழ் போன்ற நிகழ்வுகள் வடகிழக்கு தமிழர் தாயகத்தின் தேசிய உணர்வினை கட்டியெழுப்புவதற்கான ஒரு தளமாக மாற்றவேண்டிய அவசியம் அனைத்து தமிழர்களுக்கும் உள்ளது.

இதில் யாரும் கட்சி வேறுபாடுகள் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை.இன்று தமிழ் தேசிய போராட்டத்தினை காட்டிக்கொடுத்தவர்களும்,எமது பிள்ளைகளை சிங்கள இராணுவத்திடம் காட்டிக்கொடுத்தவர்களும் தம்மை தமிழ் தேசிய வாதிகளாக காட்டமுற்படுகின்றனர்.இவர்களின் முகத்திரைகள் கிழிப்பதற்கான களமாகவும் எழுக தமிழ் களம் பயன்படுத்தப்படவேண்டும்.

எனவே வடகிழக்கில் உள்ள குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழர் உணர்வாளர்கள் ஒருமித்த ஆதரவினை எழுக தமிழ் நிகழ்வுக்கு வழங்கி அதனை வலுப்படுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.