தமிழரசுக் கட்சியின் பலவீனத்தை அறிந்த ஐ.தே.க ஏனைய தமிழ்க் கட்சிகளுக்கும் வலைவீச்சு

ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனிடமும், புளொட் தலைவர் சித்தார்த்தனிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமது கூட்டணியை ஆதரிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

இன்று காலையில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ரணில் விக்கிரமசிங்க, அவர்களை நேரில் சந்தித்துப் பேச விருப்பம் தெரிவித்தார்.

ஆனால் செல்வம் அடைக்கலநாதன் மன்னாரில் நிற்பதாலும், சித்தார்த்தன் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள இருப்பதாலும் ரணிலை சந்திப்பது சாத்தியமற்றது என்று தெரிவித்தனர்.

இதனால், தொலைபேசியிலேயே இருவருடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் போது, இருவரும் ஜனநாயக தேசிய முன்னணியை ஆதரிக்கும்படி கேட்டுக் கொண்டார். இந்த அறிவிப்பை பகிரங்கமாக விடுக்க வேண்டும் என்றும் ரணில் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கும் முடிவை இலங்கை தமிழரசுக் கட்சி ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த முடிவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொலைபேசியில் பதிலளித்த செல்வம் அடைக்கலநாதன், எதிர்வரும் 06ஆம் திகதி கட்சியின் தலைமைக்குழு கூடி இறுதி முடிவு எடுக்கப்படும். அதன் பின்னரே தமது நிலைப்பாட்டை தெரிவிக்க முடியும் என்று தெரிவித்தார்.

ரணிலுடன் நெருக்கமாக இருந்த தமிழ் அரசுக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்த அதேவேளை, தமக்கு நிதியொதுக்கீடுகளில் காட்டப்பட்ட பாரபட்சம் காரணமாக செல்வம் அடைக்கலநாதன் ரணில் மீது அதிருப்தியடைந்திருந்தார்.

இதனால், புதிதாக அமையவுள்ள அரசாங்கத்திலும் இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக ரெலோ அமைப்பினர் ரணில் தரப்பினரை ஆதரிப்பதில் பின்னடிப்பு செய்து வருகின்றனர்.