தமிழகத்தில் 1184 கைதிகள் பிணையில் விடுதலை

கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக தமிழக சிறைகளில் இருந்து 1,184 கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கொரோனா தொற்று தற்போது இந்தியாவில் மிகத் தீவிரமாகப் பரவி வருகின்றது. இதனைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று(25) முதல் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் முதல் கொரோனா நோயாளி மதுரையில் பலியாகியுள்ளார்.

இந்த வைரஸ் பாதிப்பு சிறைகளில் ஏற்படாமல் இருப்தற்கு சிறைத்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சிறையில் கைதிகளின் நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் கைதிகளின் எண்ணிக்கை குறைக்கத் திட்டமிடப்பட்டது.

இதற்கமைவாக முதல் கட்டமாக சிறு குற்றங்களில் ஈடுபட்டு பிணை கிடைக்காமலும்இ பிணை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறையில் இருந்தவர்களையும் பிணையில் விடுதலை செய்வது என்று  உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது.

கடந்த இரு நாட்களில் தமிழக சிறைகளில் இருந்து 1,184 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீதமாக இருக்கும் 4ஆயிரம் பேரையும் விடுவிப்பது தொடர்பாக ஆலோசனை பெறப்பட்டு வருகின்றது.