தமிழகத்திலுள்ள 3,000 ஈழத் தமிழரை திருப்பி அழைக்க நடவடிக்கை தினேஸ் குணவர்த்தன

தமிழகத்திலுள்ள 3,000 ஈழத் தமிழரை திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தில் தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழருக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்பது கோரிக்கை. இதனை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஸ் குணவர்த்தன 2 நாட்கள் பயணமாக நேற்று(09) இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அவர் புது டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுதலை, தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் முகாம்களில் உள்ள 3,000 ஈழத் தமிழர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என தினேஸ் குணவர்த்தன கூறியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என சட்டசபையில் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆளும் அதிமுகவின் நிலைப்பாடாகவும் இது அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இது இவ்வாறிருக்க ஈழத் தமிழரை திருப்பி அனுப்பும் விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.