தமிழகத்தின் கடைசி ஜமீன் சிங்கம்பட்டி முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்

தமிழகத்தின் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி உடல்நலக்குறைவால் தனது 89ஆவது வயதில் ஞாயிற்றுக் கிழமை காலமானார்.

திருநெல்வேலி மாவட்டம் சிங்கம்பட்டியின் 31ஆவது ஜமீனாக இருந்தவர் முருகதாஸ் தீர்த்தபதி. இந்தியாவில் 1952இல் ஜமீன் அழிப்புச் சட்டம் வந்தது. இந்தச் சட்டம் வருவதற்கு முன் பட்டம் சூட்டிய ராஜாக்களில் தமிழகத்தில் சிங்கம்பட்டி ஜமீன், தனது 3ஆவது வயதில் ஜமீனாக பட்டம் சூட்டியவராவார்.

இவரின் நண்பரான வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஸ்ணன் தனது ருவிற்றர் பக்கத்தில் தெரிவித்துள்ள இரங்கல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, 1983இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி கொடுப்பதற்கான இடம் தெரிவு செய்வது குறித்து ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதியை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களும் பேபி சுப்பிரமணியம் அவர்களும் சந்தித்தனர் என்றும், அவர்களை தனது வீட்டிற்கு அழைத்து கலந்துரையாடிய பின்னர் இடத்தெரிவிற்காக தனது வாகனத்தை கொடுத்து உதவினார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவரின் கதையை வைத்தே அண்மையில் சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படம் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது