ட்ரம்ப் இன் பதுங்கு குழி

அண்மை நாட்களில் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையை அண்மித்த இடங்களில் நடைபெறும் போராட்டங்களால் ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலுள்ள பதுங்கு குழிக்குள் அழைத்துச் செல்லப்பட்டார் என்ற செய்திகள் வந்தன.

கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிளெய்ட் அமெரிக்க காவலரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து கறுப்பினத்தவர்களால் வெள்ளை மாளிகை முன்பு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், நாளுக்கு நாள் அது தீவிரமாகியும் வருகிறது.

குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை இரவு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரின் மனைவி மெலனியா, மகன் பாரென் ஆகியோர் பதுங்கு குழிக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர் என்ற செய்திகள் வெளிவந்தன.

அவசர காலங்களில் நிர்வாகத்தில் இடையூறுகள் ஏற்படாது இருப்பதற்காகவும், அணு ஆயுதத் தாக்குதல் போன்ற காலங்களில் பாதுகாப்பாக இருப்பதற்காகவும் வெள்ளை மாளிகையில் பதுங்கு குழி அமைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

வெள்ளை மாளிகை கட்டடத்தை இடித்து தரைமட்டம் ஆக்கினாலும் பதுங்கு குழிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று த நியூயோக் ரைம்ஸ் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதுங்கு குழியானது 1940ஆம் ஆண்டில் வெள்ளை மாளிகையில் அப்போதைய அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் ஆட்சிக் காலத்தின் போது அமைக்கப்பட்டது. பின்னர் 1948ஆம் ஆண்டு அதிபர் ட்ரூமென் ஆட்சியின் போது விரிவாக்கம் செய்யப்பட்டது.

பின்னர் 2001இல் அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டைக் கோபுரத் தாக்குதலின் போது வெள்ளை மாளிகை அதிகாரிகள் அனைவரும் பதுங்கு குழிக்குள் தங்க வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்த பதுங்கு குழியானது வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதி கட்டடத்திற்கு கீழே அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும் இது சரியானதா என்பதை உறுதிப்படுத்தும் தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.