டோரியன் புயல் 13,000 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

அமெரிக்காவின் பஹாமா, அகோபா தீவுகளை தாக்கிய டொரியன் புயலினால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

டொரியன் புயலின் தாக்கம் காரணமாக சுமார் 13,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கரீபியன் தீவு அருகே மையம் கொண்டிருந்த டொரியன் புயல், அதிக சக்திவாய்ந்த புயலாக உருவெடுத்தது.

இது மணிக்கு 260 கி.மீ வேகத்தில் கரையைக் கடக்கும் எனவும், வீடுகள், கட்டடங்கள் சேதமடையக் கூடும் எனவும் அமெரிக்க தேசிய புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஹாமா, அகோபா தீவுப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

ஐந்தாம் நிலை புயலாக அறிவிக்கப்பட்டிருந்த டொரியன் நேற்று(திங்கட்கிழமை) காலை நிலைவரப்படி பஹாமாவிற்கு கிழக்கே 35 மைல் தொலைவில் மையம் கொண்டிருந்தது.

இந்த புயல் பஹாமா, அகோபா தீவு பகுதியில் கரையை கடந்தபோது, மணிக்கு 295 கிமீ வேகத்தில் காற்று வீசியது. கடல் கொந்தளிப்பு காரணமாக கடலோரத்திலிருந்த வீடுகள் அலைகளால் மூழ்கடிக்கப்பட்டன.

இதன்போது 13,000 இற்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் கட்ட நிவாரண உதவிகள் வழங்கவும் 500 குடும்பங்களுக்கு தற்காலிக தங்குமிட வசதி ஏற்படுத்தவும் செஞ்சிலுவை சங்கத்தின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 1992ஆம் ஆண்டு பஹாமாவை புயல் தாக்கியதில் 65 பேர் உயிரிழந்திருந்ததுடன், சுமார் 65 ஆயிரம் வீடுகள் சேதமடைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது