ஜே.வி.பி. வேட்­பா­ள­ருக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்­க­ளிப்­பது கோத்­தாவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் – மனோ

ஜே.வி.பி. வேட்­பா­ள­ருக்கு தமிழ், முஸ்லிம் வாக்­கா­ளர்கள் வாக்­க­ளிப்­பது சஜித்தின் வெற்றி வாய்ப்பை குறைத்து, கோத்­தாவை வெற்றி­பெற வைக்கும் வாய்ப்பை அதி­க­ரிக்­கி­றது என்று தமிழ் முற்­போக்­கு ­கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ  கணேசன் தெரி­வித்­துள்ளார். இது குறித்து தனது முகநூல் பக்­கத்தில் பதி­வொன்றை அவர் இட்­டுள்ளார். அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

ஜே.வி.பி. ஒரு அர­சியல் சிறு­பான்மை கட்சி. இன்று ஒப்­பீட்­ட­ளவில் நல்ல கட்­சிதான். அதன் தலைவர் அநுர என் நல்ல நண்பர். அநுர வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்டவுடன் அவ­ருக்கு முதலில் வாழ்த்து சொன்ன தமிழ் அர­சி­யல்­வாதி நான்தான். இக்­கட்­சியின் அர­சியல் குழு உறுப்­பி­னர்கள் பலர் என் நண்­பர்­கள்தான். இந்த கட்­சிக்கும் ஒரு கறுப்பு பக்க வர­லாறு, ஐ.தே.க., ஸ்ரீல.சு.க. மற்றும் இன்­றைய பொதுஜன பெர­முன போன்று இருக்­கி­றது. எனினும் இன்­றைய எல்லா பிரச்­சி­னை­க­ளுக்கும் வர­லாற்­றி­லி­ருந்து விடை தேடக்கூடாது வர­லாற்­றி­லி­ருந்து பாடம்தான் படிக்க வேண்டும்.

ஆனால், இங்கே ஒரு பிரச்­சினை இருக்­கி­றது. ஜே.வி.பி, இன்­றைய போட்­டியில் வெகுதூரம் தள்ளி மூன்றாம் இடத்தில் இருக்­கி­றது. வெற்றி பெறு­வது சாத்­தி­ய­மில்லை. இந்­நி­லையில் இவர்­க­ளுக்கு தமிழ், முஸ்லிம் வாக்­கா­ளர்கள் வாக்­க­ளிப்­பது, சஜித்தின் வெற்றி வாய்ப்பை குறைத்து, கோத்­தாவை வெற்­றி­பெற வைக்கும் வாய்ப்பை அதி­க­ரிக்­கி­றது. சஜித், கோத்தா – இரு­வரும் ஐம்­பது விகி­தத்­துக்கு போட்டியிடும் போது, ஜே.வி.பி.  ஐந்து விகி­தத்­துக்கு போட்டி இடு­கி­றது. இதுதான் உண்மை. இதை மறைத்து, அலங்­கார வார்த்­தை­களை கொண்டு, பூசி மெழு­கு­வது பிழை.