ஜப்பான் பிரதமரின் சிறப்புத் தூதர் சிறிலங்கா விஜயம்

ஜப்பான் பிரதமரின் சிறப்பு ஆலோசகர் டாக்டர் ஹிரோட்டோ இஸுமி இம்மாத இறுதியில் சிறிலங்கா வரவுள்ளதாக அறியமுடிகின்றது.கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் மற்றும் சிறிலங்கா மீதான பயண ஆலோசனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஜப்பானிய பிரதமர் ஷின்ஜோ அபே, சிறிலங்காவிற்கு சிறப்புத் தூதுவரை அனுப்ப முடிவு செய்துள்ளார்.

இவர் பிரதமர் ரணில் விக்கிரசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்துவர் எனவும் அறிய முடிகின்றது. ஜுன் 20 முதல் 22ஆம் திகதிக்குள் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறப்புத் தூதரின் விஜயத்தின் போது, சிறிலங்கா மீதான பயண ஆலோசனையில் ஜப்பான் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் மத்திய அதிவேக வீதி அமைக்கும் திட்டத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய கூட்டு ஒப்பந்தம் தொடர்பாகவும் விவாதிக்கப்படும் எனவும் கருதப்படுகின்றது.

இம்மாத இறுதியில் அமெரிக்க இராஜாங்க செயலரும் சிறிலங்கா விஜயம் செய்யவுள்ளார் என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒரு விடயமாக அமைகின்றது.