ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் அமெரிக்காவின் ஆலோசனை குற்றஞ்சாட்டும் வாசுதேவ நாணயக்கார

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடப் போவதாக அறிவித்து வரும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசாவிற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முழுமையான ஆதரவு கிடைத்திருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளிக் கட்சியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் ஒழுக்கம் என்பன குறித்து சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபயா ராஜபக்ஸ அறிவித்துள்ள நிலையில் அந்த அறிவிப்பைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று குற்றச்சாட்டுக்களை கூறித் திரிவதாகவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவாக செயற்படுகின்ற சோஷலிச ஜனநாயக மக்கள் முன்னணியின் வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்திற்குப் பின்னால் அமெரிக்காவின் ஆலோசனைகள் அமுல்ப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.