ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவு வழங்கும் சந்திரிகா

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவிற்கு தாம் ஆதரவு வழங்குவதாக சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்த தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக மகிந்த ராஜபக்ஸவின் சகோதரர் கோத்தபயா ராஜபக்ஸ போட்டியிடுகின்றார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக சஜித் பிரேமதாசாவும், மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அநுரகுமார திஸநாயக்கவும், இலங்கை சோசலிசக் கட்சி சார்பில் அஜந்த பெரேராவும், தேசிய மக்கள் இயக்கம் சார்பில் முன்னாள் இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்கவும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், இந்திய வம்சாவழியைச் சேர்ந்த சுப்பிரமணியம் குணரத்தினம் உட்பட 35பேர் போட்டியிடுகின்றனர்.

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, இல்ஙகை தொழிலாளர் காங்கிரஸ் உட்பட 17 கட்சிகள் சிறிலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபயா ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்குகின்றனர்.

மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்குக் கூட்டணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய மக்கள் முன்னணி, புதிய தொழிலாளர் முன்னணி, சிறிலங்கா தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தேசிய திட்டம், நவ சமசமாஜக் கட்சி, சிறிலங்கா ஜனநாயக முன்னணி, ஐக்கிய மக்கள் முன்னணி, பலமு பெரமுன, மக்கள் தொழிலாளர் முன்னணி உட்பட 12 கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரான சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவாக உள்ளன.

வெள்ளிக்கிழமை தபால் வாக்குப் பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டினை இன்னும் அறிவிக்கவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவினை பிரதான கட்சிகளான சிறிலங்கா பொதுஜன பெரமுனவும், ஐக்கிய தேசியக் கட்சியும் கோரியுள்ளன.

இலங்கையில் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கும், கோரிக்கைகள் குறித்தும் தற்போது எழுந்துள்ள புதிய பிரச்சினைகளுக்குத் தீர்வினை வழங்கக்கூடிய கட்சிக்கு தனது ஆதரவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வழங்கும் எனத் தெரிகின்றது.

இதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவிற்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இதற்காக வெள்ளிக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் அவரது ஆதரவாளர்களுக்கும் இடையேயான தேர்தல் உடன்படிக்கை ஒப்பந்தம் கொழும்பில் உள்ள தாஜ்சமுத்திரா விடுதியில் வெள்ளிக்கிழமை கையொப்பமானது.