சோமாலியாவில் அமெரிக்க இராணுவ முகாம் மீதான தாக்குதலிற்கு அல்-ஷபாப் காரணமா?

சோமாலியாவில் அமெரிக்க கமாண்டோ படையினர் பயிற்சியெடுத்து வரும் ஒரு இராணுவ முகாம் மிது ஜிஹாதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சோமாலியாவின் தெற்கு ஷபேல் பகுதியில் உள்ள பாலேடோக்லே விமான நிலையத்தில் பல குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் நடந்ததாக உள்ளுர் மக்கள் கூறுகின்றனர்.

இந்த தாக்குதலை தாங்கள் நடத்தியதாக தெரிவித்த அல்-ஷபாப் தீவிரவாத குழு, இராணுவ மகாமின் கதவுகளை கார் வெடிகுண்டு மூலம் தகர்த்ததாகவும், அதன் பின்னர் தனது போராளிகளை முகாம் உள்ளே அனுப்பியதாகவும் கூறப்படுகின்றது.

தாக்குதல் நடந்த இடத்திலிருந்து ஜிஹாதி கிளர்ச்சியாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

“மிகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட இராணுவ முகாமின் உள்ளே தடைகளை தகர்த்து போராளிகள் நுழைந்தனர். மிகவும் தீவிரமாக நடந்த துப்பாக்கி சண்டையில் அவர்கள் ஈடுபட்டனர்“ என்று அல்-ஷபாப் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சோமாலியா தலைநகரான மொகதீஷுவின் மேற்கு பகுதியில் 100 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இந்த இராணுவ முகாம், அமெரிக்க சிறப்பு படைகள், சோமாலியா படையினர் மற்றும் உகண்டா அமைதிப் படையினர் ஆகியோரின் தளமாக இந்த இராணுவ முகாம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி முகாமாகவும், டிரோன்களை ஏவும் தளமாகவும் இந்த இராணுவ முகாம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

தங்களின் கூட்டு வான்வழி தாக்குதல்களுக்கு பதில் நடவடிக்கையாக அண்மைய காலங்களில் மொகதீஷுவில் பதில் தாக்குதல்களை அல்-ஷபாப் நடத்துவதாக சோமாலியா கூறுகின்றது.