சுவிஸ் போதகரைச் சந்தித்தவருக்கு கொரோனா! உறுதிப்படுத்திய அதிகாரிகள்

யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா நோயாளி இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வந்து திரும்பிய சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய ஆண் ஒருவரே இவ்வாறு தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிசிக்சை பெற்று வரும் இவருக்குக் கொரோனா தொற்று உள்ளமை மருத்துவப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுவிஸ் போதகர் யாழ்ப்பாணம் வந்திருந்தவேளை அவருடன் பழகியவர்கள், ஆராதனையில் பங்கேற்றவர்கள் ஆகியோரைத் துரித கதியில் அடையாளம் கண்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் சுகாதாரத் திணைக்களத்தினரும் பொலிஸாரும் இறங்கியுள்ளனர்.

இவ்வாறானவர்களை உடனடியாகத் தேடிப்பிடித்து தனிமைப்படுத்துவதன் மூலம் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக முன்னெடுப்பதற்கு ஏற்பாடாகியியுள்ளது.

யாழ்ப்பாணத்திலும் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டார் என்ற செய்தி ஊடகங்களிலும் சமுக வைலைத்தளங்களிலும் பரவியதை அடுத்து மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டது. யாழ்ப்பாணம் வந்த சுவிஸ் போதகர் சென்ற இடங்களில் வசிக்கும் மக்கள் இதனால் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் மக்கள் அச்சப்படவேண்டியதில்லை என்றும், வீடுகளுக்குள் இருந்து தம்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதன் மூலம் நோய் தொற்றில் இருந்து விடுபடமுடியும் என்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

சுவிஸ் போதகர் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது அவரது ஆராதனையில் பங்கேற்ற 137 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். போதகர் யாழ்ப்பாணத்தில் இருந்தவேளை அவருடன் நெருங்கிப் பழகிய ஒருவருக்கே தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் நேற்று யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெல்பியா தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த போதகர் போல் சற்குணராசாவால் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. போதகரை அறை ஒன்றில் சந்தித்துப் பேசிய ஆண் ஒருக்கே இவ்வாறு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப் படுத்தப்பட்டுள்ளது.

அவர் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பில்உள்ள வைத்தியசாலைக்கு இன்று மாலை மாற்றப்படவுள்ளார் என்று யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்ட முதல் நோயாளி தாவடியைச் சேர்ந்த கட்டட ஒப்பந்தகாரர் எனத் தெரிவிக்கப்பட்டது.