சுதந்திர தினத்தன்று கிளிநொச்சியில் நடைபெற்ற எதிர்ப்புப் பேரணி

இன்றைய சிறீலங்காவின் சுதந்திர தினத்தன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் கிளிநொச்சியில் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் காலை பத்து மணியளவில் ஆரம்பமான பேரணியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உட்பட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, கிளிநொச்சி தமிழரசுக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

பேரணியில் இலங்கை அரசைக் கண்டித்து எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர். அதில் “காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்காத நாட்டில் சுதந்திர தினம் எதற்கு?”, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பதில்கூறு” போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

இதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சட்டத்தரணி சுகாஸ், மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்ட மற்றுமோர் பேரணியும் கிளிநொச்சியில் நடந்தது.

பேரணியில் கலந்து கொண்டோர் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் பங்கு கொண்டிருந்ததுடன், ”சிறீலங்காவிற்கு சுதந்திர நாள் அது தமிழ் மக்களுக்கு கரிநாள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உள்ளக விசாரணைகள் மூலம் நீதி கிடைக்காது”, நாட்டின் சுதந்திரம் சிங்களவர்களுக்கு மட்டும் தானா?” போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

இவர்களின் பேரணி கிளிநொச்சி டிப்போ சந்திவரை சென்றது.