சீனாவுடனான போரை எதிர்கொள்ள இந்தியா தயாரா? வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இந்தியா – சீனா எல்லைப் பகுதியான கல்வான் பகுதியில் கடந்த ஜுன் மாதம் இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து இந்தியா சீனாவுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதான தோற்றப்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன.

அதனை உறுதிப்படுத்துவது போல இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான உறவுகளும் பலப்பட்டு வருவது போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியா, அமெரிக்கா, யப்பான் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கூட்டான படை ஒத்திகை, அமெரிக்கா தனது பசுபிக் பிராந்திய கட்டளைப் பீடத்தை இந்து – பசுபிக் கட்டளை மையமாக மாற்றியது போன்றவற்றை இங்கு குறிப்பிடலாம். அது மட்டுமல்லாது, இந்தியாவுக்கான ஆயுதங்களை வழங்கவும் அமெரிக்கா முன்வந்துள்ளது.

2027 ஆம் ஆண்டு உலகின் பொருளாதார வல்லரசான அமெரிக்காவை சீனா பின்தள்ளிவிடும் என்ற கணிப்பின் பின்னர் தான் அமெரிக்கா சீனாவுக்கு எதிரான தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் இருந்து சீனாவுக்கு எதிராக காய்களை நகர்த்திவரும் அமெரிக்கா சீனாவுடனான எல்லை நாடுகளை குறிவைத்து வருகின்றது.

தென் சீனக்கடலுக்கு அண்மையாக வியட்னாம், தாய்வான், பிலிப்பைன்ஸ், மலேசியா என பல நாடுகளை குறிவைத்து தனது உறவுகளை பலப்படுத்திவரும் அமெரிக்கா, சீனாவுக்கு எதிராக இந்தியாவையும் தூண்டிவிட முற்பட்டு நிற்கின்றது.

அவுஸ்த்திரேலியாவின் பேர்த் பகுதியில் தனது ஈரூடக கடற்படை அணியினரின் தளத்தை நிறுவிய அமெரிக்கா தற்போது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது பி-2 எனப்படும் அணுக்குண்டு வீச்சு விமானங்களையும் நகர்த்தியுள்ளது.

RAF F35B and USAF B2 Formation சீனாவுடனான போரை எதிர்கொள்ள இந்தியா தயாரா? வேல்ஸ் இல் இருந்து அருஸ்ஒரே தடவையில் 7 அணுக்குண்டுகளை சுமந்து செல்லும் இந்த விமானங்கள், எதிரியின் ரடார் திரைகளில் இருந்து தப்பிக்கும் திறக் கொண்டதுடன், உளவுத்தகவல்களையும் திரட்டும் திறன்கொண்டது. இந்த விமானங்களின் வரவு என்பது இந்திய – சீனா போர் ஏற்பட்டால் அமெரிக்கா இந்தியாவுக்கு சார்பாக களமிறங்கும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.

இவை எல்லாம் ஊடகங்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அனுமானங்களே தவிர களநிலமை மறுவளமானது. இந்தியாவை பொறுத்தவரையில் சீனா தன்னுடன் ஒரு நேரிடையான பெருமெடுப்பிலான போருக்கு வரமாட்டாது என்று நம்புகின்றது. ஏனெனில் சீனாவின் கவனம் முழுக்க அமெரிக்காவிற்கு எதிரான காய்நகர்த்தல்களிலும், தனது வர்த்தக நலன்களிலும் தான் குவிந்துள்ளது. எனவே தன்னை சீனா கண்டுகொள்ளாது என இந்தியா நம்புகின்றது.

அதேசமயம், அமெரிக்காவுக்கும் – சீனாவுக்குமிடையிலான உறவுகள் வேகமாக சிதைவடைந்து வருகின்றன. அதாவது 1962 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு நிலை தற்போது தோன்றியுள்ளதாக இந்தியா கருதுகின்றது. இதன் மூலம் அனைத்துலகத்தின் கவனத்தை தான் பெறலாம் என இந்தியா நம்புகின்றது. தனக்கும் ரஸ்யாவுக்கும் இடையில் ஒரு நல்ல உறவு உள்ளதாகவும் இந்தியா கருதுகின்றது.

chi Indi சீனாவுடனான போரை எதிர்கொள்ள இந்தியா தயாரா? வேல்ஸ் இல் இருந்து அருஸ்ரஸ்யாவுக்கும் தமக்கும் இடையில் மிக நெருங்கிய உறவு உள்ளதாக இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அண்மையில் தெரிவித்திருந்தார்.

ஆனால் 1962 ஆம் ஆண்டும் சீனாவக்கும் ரஸ்யாவுக்கும் இடையில் நல்ல உறவுகள் இல்லாத சமயத்தில் தான் போரில் இந்தியா தோல்வியை தழுவியிருந்தது. இந்தியாவுக்கான பிரதான ஆயத வினியோகம் செய்யும் நாடாக ரஸ்யா இருந்தாலும், அது ஒரு வழமையான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகின்றது.

எனவேதான் போர் ஒன்று ஏற்பட்டால் ரஸ்யா இந்தியாவுக்கு நேரிடையான ஆதரவுகளை வழங்கும் என்பது நடைமுறைச் சாத்தியமற்றது என்று கருதப்படுகின்றது. இந்தியா, ரஸ்யா, சீனா போன்றவை சங்காய் கூட்டமைப்பு, பி.ஆர்.ஐ.சி.எஸ் போன்ற அமைப்புக்களில் இருக்கின்றன. இந்த பொருளாதார கூட்டமைப்பை சிதைத்துவிட ரஸ்யா விரும்பாது. அனைத்துலகத்தை பொறுத்தவரையில் அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அஞ்சியே பிரித்தானியா குவாவே நிறுவனத்தின் 5 ஜி தொழில்நுட்பத்திற்கு தடை விதித்ததே தவிர அவர்கள் சீனாவுக்கு எதிராக நேரிடையாக இறங்கப்போவதில்லை.

அமெரிக்காவை பொறுத்தவரையிலும் இந்தியாவக்கு ஆதரவாக அது நடந்துகொண்டாலும், போர் என்று ஏற்பட்டால் அது தனது துருப்புக்களை இந்தியாவுக்கு ஆதரவாக களமிறக்குமான என்பது கேள்விக்குறியே. அமெரிக்கா தனது ஆயுதங்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதுடன், உளவுத் தகவல்களையும் வழங்கலாம்.

ஆனால் இந்தியாவை பொறுத்தவரையில் இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி சீனாவுக்கு எதிராக ஒரு பேரம் பேசும் நிலையை எட்டிவிட முற்பட்டு நிற்கின்றது. அது மட்டுமல்லாது இந்த விவகாரத்தை முதன்மைப்படுத்தி உள்ளுரிலும் ஒரு அரசியல் ஆதாயத்தை தேட முற்பட்டு நிற்கின்றது.

எனவே தான் சிறு சிறு மோல்களின் மூலம் தனக்கு உள்நாட்டில் ஒரு விம்பத்தை ஏற்படுத்த அது முயன்று வருகின்றது. அதே சமயம், அமெரிக்காவை மகிழ்ச்சிப் படுத்த சீனாவின் 59 வகையான மென்பொருட்களை தடை செய்துள்ளது. பிரான்ஸ் இடம் இருந்து ரபேல் வகையான போர் விமானங்களையும் கொள்வனவு செய்துள்ளது.

ஆனால் சீனாவை பொறுத்தவரையில் அது பாகிஸ்தானுடன் நெருக்கமான பிணைப்புக்களை ஏற்படுத்தியுள்ளதுடன், சிறீலங்கவையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் தான் வைத்துள்ளது. மேலும் இந்தியாவின் வான்படை பலப்படுத்தல்களுக்கு எதிரான தனது 32 விமானங்களை மோதல்கள் இடம்பெற்ற பகுதிக்கு அண்மையாக நகர்த்தியுள்ளது.

சீனாவின் படை பலத்திற்கு ஈடாக தனது படை நகர்த்தல்களை மேற்கொள்ள இந்தியாவின் பொருளாதாரம் இடம்கொடுக்காது. படை பலத்திலும், தொழில்நுட்பத்திலும் சீனா இந்தியாவை விட பல மடங்கு முன்நிலையில் உள்ளது. அதன் பாதுகாப்புச் செலவீனங்கள் கூட இந்தியாவை விட 3 மடங்கு அதிகமானதே.

ஆகவே இந்தியாவின் சீண்டல்கள் அதிகரித்தால் சீனா தனது ஏனைய செயற்பாடுகளை ஓரம்கட்டிவிட்டு இந்தியா மீது கவனம் செலுத்தும். அது தனது எல்லை பிரச்சனையில் எந்தவொரு விட்டுக்கொடுப்புக்கும் இறங்கிவராது. எனவே இரு தரப்பும் பெரும் பொருளாதார மற்றும் ஆளணி இழப்புக்களை சந்திக்க நேரிடும்.

தன்னை சுற்றியுள்ள தேசங்களை சீனாவிடம் இழந்துவிட்டு நிற்கும் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை என்பது காலவதியான கொள்கை. எனவே சீனாவை ஒரு நெருக்கடிக்குள் தள்ள வேண்டும் என்றால் தன்னை சுற்றியுள்ள நாடுகளில் உள்ள இனங்களை அல்லது அந்த நாடுகளை தன்பக்கம் திருப்பவேண்டியதே இந்தியாவின் முதன்மையான பணியாக இருக்க வேண்டும்.