சீனாவில் சிக்கியுள்ள இலங்கை மாணவரை மீட்க ஐ.நா.விடம் விடுக்கப்பட்ட காேரிக்கை

கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவின் வுஹான் நகரில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதில் தலையீடு செய்யுமாறு அவர்களது உறவினர்கள் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் கோரிக்கை விடுத்தனர்.

மாணவர்களை வுஹான் நகரிலிருந்து வெளியேற்றுவது தொடர்பில் சீன அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சீனாவிற்கான பதில் இலங்கை தூதுவர் தெரிவித்தார்.

சீனாவின் வுஹான் நகரில் சுமார் 33 இலங்கை மாணவர்கள் தற்போது சிக்கியுள்ளனர்.

வுஹானில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் நாடு திரும்பியதும் அவர்களை 14 நாட்கள் தங்கவைத்து பரிசோதனைகளை நடத்துவதற்காக தியத்தலாவை இராணுவ முகாமில் விசேட வைத்தியசாலையொன்று அமைக்கப்படுகிறது. 48 மணித்தியாலங்களில் இந்த வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஷென்ஹய் மற்றும் பெய்ஜிங் ஆகிய நகரங்களிலிருந்து மேலும் 140 இலங்கையர்கள் நேற்று அதிகாலை நாடு திரும்பினர். சீனாவில் இருந்து இலங்கையர்களை ஏற்றிய மேலும் நான்கு விமானங்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடையவுள்ளன.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படுகின்ற 17 பேர் அங்கொடை தொற்று நோயியல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றிலிருந்து இன்று பகல் வரை 6 நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அனுமதிக்கப்பட்டிருந்த ஐந்து நோயாளர்கள் வைத்தியசாலையில் இருந்து நேற்று வெளியேறியுள்ளனர். இரத்தப் பரிசோதனையில் அவர்கள் கொரோனா தொற்றினால் பீடிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.