சிலோன் கொலனியிலிருந்து நியுசிலாந்திற்கு சென்ற 243 பேர் நடுக்கடலில் மாயம்

இந்தியா தெற்கு டில்லியில் உள்ள மதன்கீரில் உள்ளது சிலோன் கொலனி இங்கு இருப்பவர்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கையிலிருந்து அங்கு வந்து குடியேறியவர்கள் என்பதால் அந்த இடத்திற்கு இவ்வாறு பெயர் வந்தது.

கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி நியூசிலாந்து சென்ற 243பேரில் 164பேர் இந்தப் பகுதியிலிருந்து சென்றவர்களாகும். கேரளாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து ஐந்து மாதங்களுக்கு முன்பு புறப்பட்ட படகில் இவர்களின் தற்போதைய நிலை பற்றிய எந்தவொரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இவர்களிடம் கடவுச்சீட்டோ, விசாவோ எந்தவொரு அத்தாட்சியோ இருக்கவில்லை.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இது தொடர்பாக பசுபிக் பெருங்கடல் கரையில் உள்ள நாடுகளுக்கு தகவல் அளித்துள்ளதாகவும், ஆனால் எந்தவித பதிலும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இவர்களுடன் ஜனவரி 11ஆம் திகதி தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். வீடுகள், சொத்துக்கள், நகைகளை விற்றே இவர்கள் பயணித்ததாகவும், கேரளாவின் ஏர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள சராய் கடற்கரையை ஒட்டியுள்ள விடுதி ஒன்றில் அவர்கள் தங்க வைக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். இதில் குடும்பத்தினர் சென்றுவிட கணவன் மட்டும் தனியாக விடப்பட்டுள்ளார். இவர்களை ஏற்ற வந்த வாகனத்தில் இவருக்கு இடம் கிடைக்காததால், அடுத்த வாகனத்தில் இவரை அழைத்துச் செல்வதாக கூறி வாகனம் சென்று விட்டது. இவரின் குடும்பத்தினர் குறித்த படகில் சென்று விட்டனர்.

இது தொடர்பாக கேரள பொலிசார் தெரிவிக்கும் போது, முனம்பம் கடற்கரையில் 80 பைகள் கிடப்பதாக  தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்தே தங்களுக்கு இந்தப் பயணம் குறித்து தகவல் தெரியவந்ததாக குறிப்பிடுகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 10இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இந்த பயணத்திற்காக சென்று பயணிக்காது திரும்பியவர்களாவர்.

இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் பத்திரிகையாளர் மத்தியில் பேசும் போது, படகில் சென்றவர்களின் உறவினர்களிடமிருந்து மனுக்கள் வந்ததாக கூறுகிறார்.

newzealand boat 3 சிலோன் கொலனியிலிருந்து நியுசிலாந்திற்கு சென்ற 243 பேர் நடுக்கடலில் மாயம்தே மாதா – 2 என்று அழைக்கப்பட்ட அந்தப் படகு குறித்து  அவுஸ்திரேலியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. 2013இல் டெல்லியில் உள்ள மதன்கிரியில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு 70பேர் பயணம் செய்ததாக அவர்கள் தெரிவித்ததால், அவுஸ்திரேலியாவிற்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

படகு குறித்து எந்தவொரு தகவலும் வெளியுறவு அமைச்சகத்திற்கோ, காவல்துறையினருக்கோ கிடைக்கவில்லை. தங்கள் உறவினர்களை விரைந்து கண்டுபிடிக்குமாறு அரசாங்க அதிகாரிகளிடம் படகில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது போன்ற சம்பவங்கள் முன்னரும் நடைபெற்றுள்ளன. முன்னர் நடைபெற்ற சம்பவங்களை அறிந்தும், இப்படியான பயணங்களை மேற்கொள்கின்றனர் என்றால் இவர்கள் இந்தியாவில் இந்தப் பயணத்தைவிட கொடுமையான சூழ்நிலையில் இருக்கின்றார்கள் என்பதை அறிய முடிகின்றது.

தங்களுக்கு ஒரு விடியல் கிடைக்கும் என இவர்கள் நம்பியே இப்படியான உயிரைப் பணயம் வைத்து மேற்கொள்ளும் பயணங்களை செய்கின்றனர். இதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைப்பதானால், எமது நாட்டில் நாங்கள் சுதந்திரமாக வாழ ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் இடத்து இப்படியான தமிழர்களின் அழிவுகள் நிச்சயமாக நடைபெறாது.