சிலியில் பத்து இலட்சம் பேர் அமைதிப் பேரணி

சிலி அதிபர் செபஸ்டியன் பினேராவை பதவி விலகக்  கோரியும், சீர்திருத்தம் கோரியும், பாகுபாடுகளைக் களைய வேண்டும் என்று வலியுறுத்தியும் இன்று(27) சிலியின் தலைநகர் சாண்டியோவில் நடைபெற்ற மாபெரும் பேரணியில்  சுமார் 10 இலட்சம் பேர் பல மைல் தூரம் அமைதியான முறையில் பேரணியாகச் சென்றனர்.

பேரணியில் பங்கேற்றவர்கள் பல மைல்கள் நகரைச் சுற்றி நடந்து சென்று பானைகளைத் தட்டியும், கொடிகளை அசைத்தும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

சிலி அரசாங்கத்தின் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராக நடைபெற்ற இந்தப் பேரணி, 1990இல் சர்வாதிகாரி அகஸ்டோ பினோசேவின் வீழ்ச்சிக்குப் பின்னர் நடந்த பேரணி எனக் கருதப்படுகின்றது. பல நாட்களாக நடக்கும் இந்தப் போராட்டம் நாட்டின் வரலாற்றுத் தருணம் என்று சாண்டியாகோ ஆளுநர் கர்லா  ரூபிலார்  கூறியுள்ளார்.

இதே கொள்கைகளுக்கு எதிராக சென்ற வாரம் நடைபெற்ற பேரணியில் 19பேர் கொல்லப்பட்டதை அடுத்து இன்று நடைபெற்ற இந்த மாபெரும் பேரணியில் தலைநகரின் பிளாசா இத்தாலிய சதுக்கம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.

“நாங்கள் மாறிவிட்டோம். இன்றைய மகிழ்ச்சிகரமான, அமைதியான பேரணி மூலம் மேலதிக நீதி நிலவும், மேலும் ஒருங்கிணைந்ததாக இருக்கும் சிலி வேண்டும் என்று கோரி மக்கள் கோரியுள்ளனர். அத்துடன் எதிர்காலத்திற்கான நம்பிக்கையளிக்கும் பாதையையும் அவர்கள் திறந்துள்ளனர்” என்று அவர் ருவிற்றரில் குறிப்பிட்டார்.

பேரணியில் பங்கேற்ற 10 இலட்சம் மக்கள், நகரின் மக்கள் தொகையில் 5 சதவீதம் பேர் ஆவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசு எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் வால்பரைசோ நகரில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்தில் நுழைய முயன்றதால் அரசியல்வாதிகளும், அலுவலர்களும் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர்.

மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதை எதிர்த்துத் தான் இந்தப் போராட்டம் தொடங்கியது பின்னர் அந்தக் கட்டண உயர்வு கைவிடப்பட்டது. ஆனாலும், வாழ்க்கை செலவுகள் உயர்வது, பாகுபாடுகள் ஆகியவற்றை மையமாக வைத்து போராட்டம் தொடர்கின்றது.

சில நாட்கள் முன்பு போராட்டத்தில் கொள்ளை, தீவைப்பு ஆகிய சம்பவங்களும் நடந்தன. ஒரு வாரம் முன்பு இந்தப் போராட்டம்  தொடங்கியதிலிருந்து 16பேர் கொல்லப்பட்டனர். பலநூறு பேர் காயமடைந்தனர். 7 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலி நாட்டு இராணுவம் சாண்டியாகோ நகரப் பாதுகாப்பை கையில் எடுத்துள்ளது. இந்த நகரில் தற்போது அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு அமுல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வீதிகளில் 20ஆயிரம் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வாரம் முழுவதும் நடந்த போராட்டங்களில் 582பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 295 பேர் ரப்பர் தோட்டாக்களை அல்லது கண்ணீர் புகைக் குண்டுகளால் தாக்கப்பட்டனர்.

ஐ.நா. வின் ஆய்வுக்குழு, போராட்டங்களின் போது ஏற்படக்கூடிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க அடுத்த வாரம் சிலிக்கு செல்லும்.