சிறீலங்கா வான்படைக்கு இந்தியாவின் சுற்றுக்காவல் விமானம்

சிறீலங்கா வான்படையை பலப்படுத்தும் இந்திய அரசின் திட்டத்தின் அடிப்படையில் கடல் கண்காணிப்பு விமானம் ஒன்றை சிறீலங்காவுக்கு அன்பளிப்பாக வழங்க இந்தியா முன்வந்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

இந்தியா வழங்கும் படைத்துறை விமானத்தை ஆய்வு செய்வதற்காக சிறீலங்கா வான்படை அதிகாரிகள் இந்தியாவின் கொச்சின் வான்படைத்தளத்திற்கு சென்றுள்ளனர்.

ஜேர்மனின் தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டோர்னியர்-228 என்ற இந்த விமானத்தை அவர்கள் ஆய்வு செய்வதுடன், அதற்கான பயிற்சிகளையும் பெறவுள்ளனர்.

திருமலையில் சீனன்குடாவில் அமைந்துள்ள சிறீலங்கா கடற்படையின் கடல் கண்காணிப்பு படைப்பிரிவுடன் இணைந்து வான்படையினர் மேற்கொள்ளும் நடவடிக்கையில் இந்த விமானம் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.