சிறீலங்கா படைத்தரப்பில் மாற்றங்கள் – அரசியலும், பாதுகாப்பும் மகிந்தா குடும்பத்திடம்

சிறீலங்கா அரச தலைவராக கோத்தபாய ராஜபக்சா பதவியேற்ற பின்னர் சிறீலங்கா இராணுவத்தில் அதிகளவான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதானது தென்னிலங்கை அரசியல்வாதிகளிடம் பதற்றத்தை தோற்றுவித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் பதவியேற்ற ராஜபச்சா, டிசம்பர் மாதம் பல படையணிகளுக்கு புதிய தளபதிகளை நியமித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் நிலைகொண்டுள்ள 12 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியாக மேஜர் ஜெனரல் திலகரத்தினா, கிளிநொச்சி படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியாக மேஜர் ஜெனரல் குணரத்தினா, திட்டமிடல் பணிப்பாளராக பிரிகேடியர் அப்ரூ, இராணுவத்தின் செயலாளராக மேஜர் ஜெனரல் கமகே, நலன்புரி நிதி பிரிவு அதிகாரியாக கேணல் பத்மசாந்தா, முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள 59 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் பெரேரா, மாதுருஓயா பயிற்சி கல்லூரி அதிகாரியாக பிரிகேடியர் கொடித்துவக்கு, முல்லைத்தீவு வெள்ளைமுள்ளிவாய்க்காலில் நிலைகொண்டுள்ள 68 ஆவது படையணியின் 1 ஆவது பிரிகேட்டின் கட்டளை அதிகாரியாக கேணல் பிரேமவன்சா, கதிர்காமத்தில் நிலைகொண்டுள்ள 9 ஆவது சிங்க றெஜிமென்டடின் கட்டளை அதிகாரியாக மேஜர் எல் ஜி எப்பா ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சிறீலங்கா இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கும் மேலதிக பதவிகள் வழங்கி கௌரவித்துள்ளார் கோத்தபாயா, தற்போதைய இராணுவத்தளபதிக்கு மேலதிகமாக பாதுகாப்பு படையினரின் பிரதம அதிகாரி பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு நிறைவடைந்த போரின் போது அதிகளவான போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்ட சில்வா பெருமளவான அப்பாவிப் பொதுமக்களையும் படுகொலை செய்திருந்தார். அவருக்கு எதிராக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் குரல் எழுப்பி வருகையில் சிறீலங்கா அரசு தொடர்ந்து அவரை கௌரவித்து வருகின்றது.