சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் – ரணில் அரசுக்கான நிதியை வழங்கியது அமெரிக்கா

கடந்த வருடம் சிறீலங்காவில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடிகளைத் தொடர்ந்து அமெரிக்கா நிறுத்தி வைத்திருந்த சிறீலங்காவுக்கான 480 மில்லியன் டொலர் உதவியை தற்போது அமெரிக்கா மீண்டும் வழங்குவதற்கு சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனா சம்மதித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

2018 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்காவை பதவியில் இருந்து நீக்கிய மைத்திரிபால சிறீசேன முன்னாள் அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவை பிரதமராக நியமித்திருந்தார்.

மைத்திரியின் இந்த செயற்பாட்டால் சீற்றமடைந்த அமெரிக்கா சிறீலங்காவுக்கு வழங்கவிருந்த மிலேனியம் சலஞ்ச் கோப்பறேசன் என்ற நிதி உதவியை உடனடியாக நிறுத்தியிருந்தது.

இந்த உதவியின் மூலம் ரணில் அரசைப் பலப்படுத்துவதே அமெரிக்காவின் திட்டம். அதன் பின்னர் ரணில் மீண்டும் பிரதமராக பதவியேற்றதும் அமெரிக்கா தான் நிறுத்திய நிதியை வழங்க முன்வந்திருந்தது. ஆனால் அதற்கு மைத்திரிபால கையெப்பமிட மறுத்ததால் நிதி முடக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது இந்த நிதியை ரணில் அரசுக்கு வழங்குவதன் மூலம் சிறீலங்காவின் தென்னிலங்கை மக்களின் ஆதரவுகளை ரணிலின் கட்சியைச் சேர்ந்த சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாக திரட்ட அமெரிக்கா கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில் தற்போது மைத்திரிபால இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மைத்திரியின் இந்த நகர்வை வரவேற்றுள்ள சிறீலங்காவின் நிதி அமைச்சரான மங்கள சமரவீரா இது ரணில் தலைமையிலான தனது அரசுக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும் என தெரிவித்துள்ளார்.