சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் – கோத்தாவைச் சந்திக்கும் துணை இராணுவக் குழுக்கள்

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபயா ராஜபக்ஸவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா 19.08 அன்று சந்தித்தார்.

முக்கியமான பிரச்சினைகள் மற்றும் உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டிய விடயங்கள் என கருதப்படும் விடயங்களை பட்டியலிட்டு மகஜர் ஒன்றும் கோத்தபயாவிடம் கையளிக்கப்பட்டது.

இச்சந்திப்பில் திருப்தி ஏற்பட்டதாகவும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கோத்தபயா ஆர்வம் காட்டி விருப்பம் தெரிவித்ததாகவும் இதை தான் வரவேற்பதாகவும் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, எந்தவொரு ஆட்சி வந்தாலும் அவர்களுடன் பேரம் பேசி தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்த்து வைப்பதே எமது ஆழமான இலட்சியமாகும்.

எனவே எவரும் விரும்பியோ விரும்பாமலோ ஆட்சி அதிகாரத்தில் உட்காரப் போகின்ற கோத்தபயா ராஜபக்ஸவை எதுவித அரசியல் பலமுமின்றி அந்த அரசியல் பலத்தை மக்கள் இனிவரும் காலத்தில் வழங்குவர் என்ற நம்பிக்கையோடு எமது நல்லிணக்க உறவுகளோடு மட்டும் கோத்தபயா ராஜபக்ஸவுடன் பரஸ்பரம் உரையாடியிருந்தோம்.

இலங்கைத் தீவின் சகல இன மக்களும் ஏற்றுக் கொண்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இருந்து தொடங்கி, அதை மேலும் பலப்படுத்தி செல்வதால், எமது தேசத்தின் அபிவிருத்தி மேலும் சிறந்து விளங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபயா ராஜபக்ஸ மீதான போர்க் குற்றச்சாட்டுக்களை தமிழ் மக்கள் மன்னித்து மறக்க வேண்டும் என இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று (19.08) அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதனிடையே, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபயா ராஜபக்ஸ மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தமிழ் மக்கள் இனி அக்கறை செலுத்த வேண்டியதில்லை. ஏனெனில் போர்க் குற்றத்தில் கோத்தபயா மட்டும் ஈடுபடவில்லை. போர் நடைபெற்ற போது தமிழீழ விடுதலைப் புலிகளும் போர்க் குற்றத்தில் ஈடுபட்டனர் என சர்வதேசம் கூறி வருகின்றது.

ஆனால் ஏதோ கோத்தபயா மட்டும் தான் போர்க் குற்றத்தில் ஈடபட்டதாக மாயை உருவாக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க அரசியல் ரீதியான குற்றச்சாட்டேயாகும்.

எனவே தமிழ் மக்கள் இவற்றை மறந்து மன்னித்து அபிவிருத்தி நோக்கி பயணிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை அண்மையில் சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் வரதராஜப்பெருமாளும் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.