சிறீலங்காவில் மத சுதந்திரம் சிறப்பாக உள்ளது – ஐ.நா அதிகாரி

சிறீலங்காவில் எல்லா இன மக்களும் தமது மத சுதந்திரத்தை அனுபவித்து வருவதாகவும், ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது அது சிறப்பாக உள்ளதாகவும் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மத மற்றும் நம்பிக்கை தொடர்பான சிறப்பு அதிகாரி அகமட் சகீட் தெரிவித்தள்ளர்.

சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்தா ராஜபக்சாவை இன்று (24) அவரது அலுவலகத்தில் சந்தித்த போதே சகீட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கங்கள் நன்றாக உள்ளதாகவும், எல்லா இன மக்களும் தமது மத சுதந்திரத்தை அனுபவித்து வருவதாகவும் ஐ.நா அதிகாரி தெரிவித்துள்ளாதாக சிறீலங்கா எதிர்க்கட்சித் தலைவர் மகிந்தா ராஜபக்சா தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 15 ஆம் நாளில் இருந்து 26 ஆம் நாள் வரையிலும் ஐ.நா அதிகாரி சிறீலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

சிறீலங்கா அரசின் ஆதரவுடன் பௌத்த துறவிகள் பௌத்த மதத்தை தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் அத்துமீறி பரப்பி வருவதுடன், தமிழ் மக்களின் நிலங்களையும் அபகரித்து வருகின்றனர்.

ஆனால் ஐ.நா அதிகாரிகள் சிறீலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக அவதானிப்புக்களை மேற்கொண்டுவருவதும், தமிழ் மக்களின் பிரச்சனைகளை ஐ.நா அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவருவதில் தமிழ்; அரசியல்வாதிகள் தோல்வி கண்டுவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.