சிறீலங்காவில் நீதியை நிலைநாட்ட அனைத்துலக சமூகம் வேறு வழிகளைத் தேடவேண்டி வரும் – ஐ.நா மனித உரிமைகள் நிபுணர் குழு எச்சரிக்கை

போர்க்குற்றவாளி என அடையாளம் காணப்பட்டவரை இராணுவத் தளபதியாக சிறீலங்கா அரசு நியமித்தது சிறீலங்கா அரசு மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை சிதைப்பதுடன், நாட்டின் உறுதித்தன்மைக்கும் ஆபத்தானது. நீதி விசாரணைகளை மேற்கொள்ள சிறீலங்கா அரசு தவறினால் அனைத்துலக சமூகம் அதனை நிலைநாட்ட வேறு வழிகளைத் தேடவேண்டி வரும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்று (27) வெளியிட்டுள்ள அதன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் மிகவும் கவலையை தோற்றுவித்துள்ளது. சிறீலங்கா அரசு முன்னைய குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

போர்க் குற்றங்கள் சுமத்தப்பட்ட ஒருவரை இராணுவ அதிகாரியாக சிறீலங்கா அரச தலைவர் நியமித்துள்ளது ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் உட்பட பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புக்களைத் தோற்றுவித்துள்ளது.

இந்த நியமனமானது பல தரப்பட்ட சமூகத்தினரிடம் தவறான தகவல்களை கொண்டு செல்லும் என்பதுடன் மக்கள் அரசு மீது நம்பிகையை இழப்பார்கள். மேலும் இது சிறீலங்காவின் உறுதித்தன்மையையும் சீர்குலைக்கும்.

போரின் போது 58 ஆவது படையணியை வழிநடத்திய சில்வா பெருமளவான மனித உரிமை மீறலகளை மேற்கொண்டிருந்தார். எனவே அவரை 2012 ஆம் ஆண்டு ஐ.நாவின் அமைதிப் படைக்கான சிறப்பு ஆலோசனைக்குழுவில் இருந்து ஐ.நா நீக்கியிருந்தது. ஆனால் அவர் மீதான குற்றங்கள் இன்றுவரை விசாரணை செய்யப்படவில்லை.

ஐ.நாவின் தீர்மானம் 30-1 இல் கூறப்பட்டதை சிறீலங்கா அரசு ஏற்றுக்கொண்டிருந்தது. ஆனால் அவர்கள் அதனை நிறைவேற்றவில்லை. படையினர் மேற்கொண்ட குற்றங்கள் தொடர்பில் எந்த விசாரணைகளும் இடம்பெறவில்லை. எனவே இது தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம்.

சிறீலங்கா அரசின் இந்த செயற்பாட்டை 2017 ஆம் ஆண்டு சிறீலங்காவக்கு பயணம் மேற்கொண்ட உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுதல் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அதிகாரி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

நீதி விசாரணைகளை மேற்கொள்ள சிறீலங்கா அரசு தவறினால் அனைத்துலக சமூகம் அதனை நிலைநாட்ட வேறு வழிகளைத் தேடவேண்டி வரும். அதற்குத் தேவையான அனைத்துலக நீதி விசாரணைகளை நாம் நாடவேண்டி வரும்.

மனித உரிமை மீறல்களை மேற்கொண்டவரை உயர் பதவியில் அமர்த்தும்போது அங்கு மேலும் மனித உரிமை மீறல்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளது. எனவே சிறீலங்கா அரசு போரின் போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடாபில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். அது படைத்தரப்பாக இருந்தாலும் இடம்பெறவேண்டும். அதன் மூலம் தான் சிறீலங்கா படையினரை மறுசீரமைக்க முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது