சிறீலங்காவில் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகம்

சிறீலங்கா ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போது முன்மொழியப்பட்ட டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பாக கோத்தபயா ராஜபக்ஸ இன்று (12) ஆராய்ந்துள்ளார்.

ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட தகவல்களை உள்ளடக்கியதும், ஒருமுறை மட்டுமே பெறக்கூடியதுமான டிஜிட்டல் முறையிலான   அடையாள அட்டைகளின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ வினவியுள்ளார்.

இந்த அடையாள அட்டைக்குரிய தகவல்களை பௌதீக ரீதியாகவும் இணையத்தின் ஊடாகவும் பார்க்க முடியும் என்பதுடன் சரியான தரவுகளுடன் கூடிய பல்வேறு சட்டங்களின் கீழ் நிர்வகிக்கப்படும் திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகவல்களையும் உள்ளடக்கியிருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

இதற்கமைவாக சாரதி அனுமதிப் பத்திரம், ஓய்வுதியம், சமுர்த்திக் கொடுப்பனவு, வருமானவரி மற்றும் வாக்களிப்பு உட்பட சகல சந்தர்ப்பங்களிலும் இந்த அட்டை பயன்படுத்தப்படக் கூடியதாக இருக்கும்.

கேத்தபயா ராஜபக்ஸ பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது 2012இல் இந்த அடையாள அட்டை வழங்குவது குறித்து முன்மொழியப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து மக்களும் விரைவில் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேத்தபயா தெரிவித்தார்.

இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன உட்பட பலர் கலந்து கொண்டனர்.