சிறீலங்காவில் அமெரிக்கத் தளம் – இந்தியா கடுமையான எதிர்ப்பு

அமெரிக்காவுக்கும் – சிறீலங்காவுக்கும் இடையிலான படைத்துறை ஒப்பந்தத்தை இந்தியா விரும்பவில்லை எனவும், அதனை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் த எக்கொனமிக்ஸ் ரைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

அமெரிக்காவுக்கும் சிறீலங்காவுக்கும் இடையிலான படைத்துறை ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகின்றது.

இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் படைத்தளங்களை சிறீலங்காவில் அமைப்பதற்கு வழி ஏற்படுத்தும். ஆனால் அமெரிக்காவுடன் எந்த உடன்பாட்டிலும் கைச்சாத்திடவில்லை என சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா கடந்த புதன்கிழமை (10) தெரிவித்துள்ள கருத்துக்களை இந்தியா மதிக்கின்றது.

தனது அயல்நாட்டில் இடம்பெறும் அன்னியநாட்டு ஊடுருவலை இந்தியா கண்காணித்து வருவதாகவும், இந்தியாவின் கேந்திர நலன்களுக்கு அது அவசியமானது எனவும் இந்தியாவின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் தனது பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை.

அமெரிக்காவுடனான ஒப்பந்தங்களை தான் அனுமதிக்கப்போவதில்லை என சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனா கடந்த வார இறுதியில் தெரிவித்திருந்தார்.

சிறீலங்காவின் இறைமையை பாதிக்கும்வண்ணம் அன்னிய நாடுகளுக்கு அனுமதி அளிக்கப்போவதில்லை, ஜே.ஆர் ஜெயவர்த்தனா மற்றும் ராஜீவ் காந்தி காலத்தில் பரிமாறப்பட்ட கடிதங்களிலும் திருமலைத்துறை முகத்தையோ அல்லது வேறு எந்த துறைமுகத்தையோ அன்னிய நாடுகளுக்கு வழங்ககூடாது என்ற உடன்பாடுகள் இருந்ததாக ரணில் கடந்த புதன்கிழமை தனது உரையில் தெரிவித்திருந்ததாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.