சிறீலங்காவில் அடிப்படை மனித உரிமைகள் கேள்விக்குறியாகியுள்ளது – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

கடந்த நவம்பர் மாதம் சிறீலங்காவில் இடம்பெற்ற அரச தலைவர் தேர்தலில் கோத்தபாயா ராஜபக்சா வெற்றிபெற்ற பின்னர் சிறீலங்காவில் வாழும் மக்களின் அடிப்படை சுதந்திரம் கேள்விக்குறியாகியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

நேற்று (15) வெளியிட்டுள்ள 362 பக்கம் கொண்ட அதன் 2020 ஆம் ஆண்டுக்கான உலக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

2005ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டுவரையிலும், கோத்தபாயாவின் சகோதரர் மகிந்த ராஜபக்சா பதவியில் இருந்தபோது இருவரும் இணைந்து பெருமளவான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தனர்.

ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள், மனித உரிமைச் செயற்பாட்டார்கள் மீதான அடக்குமுறைகள் என்பன இந்த மனித உரிமை மீறல்களில் அடங்கும். சிறீலங்காவில் கடந்த அரசு உருவாக்கிய இயல்பான சூழ்நிலைகள் எல்லாம் எதிர்காலத்தில் மாற்றமடையலாம்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு கொண்டுவந்த தீர்மானத்தை முன்னைய அரசு நிறைவேற்றவில்லை ஆனால் தற்போதைய அரச அதனை மதிக்கவேயில்லை.

மகிந்த ராஜபக்சா காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்திற்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

போர்க்குற்றங்களை புரிந்த 53 ஆவது படையணியின் கட்டளை அதிகாரிக்கு பாதுகாப்புச் செயலாளர் பதவியும், 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரிக்கு இராணுவத்தின் தலைமைப் பதவியும் வழங்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சீனா தனது பொருளாதா உதவிகளை முன்நிறுத்தி பல நாடுகளில் மனித உரிமை மீறல்களை ஊக்குவிக்கின்றது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.