சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களின் பங்கு

சிறிலங்காவில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்கள் சார்பாக போட்டியிடவுள்ள முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாகாண ஆளுநருமான M.L.A.M.ஹிஸ்புல்லா ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில், ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பாக சிவில் அமைப்புக்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் கலந்துரையாடி வருவதாகவும், இதில் சாதகமான தீர்மானம் எட்டப்படும் போது, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தான் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் அந்தத் தேர்தலில் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறவேண்டும். ஆனால், இரண்டிற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் போட்டியிடும் போது, எந்தவொரு வேட்பாளராலும் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற முடியாது போகும் என்று கூறினார்.

இவ்வாறு முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் போது, பிரதான வேட்பாளர்களுடன் பேரம் பேச முடியும் என்றும், தமது பிரதான கோரிக்கைகளுக்கு இணங்கும் பிரதான வேட்பாளருக்கு, முஸ்லிம்கள் தமது இரண்டாவது விருப்பு வாக்கை அளிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளராக தற்போது கோத்தபயா ராஜபக்ஷ, அனுரகுமார திஸநாயக்க ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு விட்டன. ஐ.தே.க சார்பாகவும் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவர்.

இலங்கையில் முஸ்லிம்களின் வாக்குகள் கிட்டத்தட்ட 16 இலட்சமாகும். கடந்த ஜனாதிபதி தேர்தலில் 12 இலட்சம் முஸ்லிம்கள் வாக்களித்திருந்தனர். அவற்றில் 11 இலட்சம் முஸ்லிம் வாக்குகள் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கே வழங்கப்பட்டன. அப்பிடியிருந்தும் கடந்த நான்கரை வருடங்களில் முஸ்லிம் சமூகம் எந்தவொரு நன்மையையும் அவரால் பெறவில்லை. ஜின்தோட்டம் தொடங்கி மினுவாங்கொட வரை முஸ்லிம்களின் சொத்துக்கள் தீப்பற்றி எரிந்தன. வில்பத்து முதல் நுரைச்சோலை வரை முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள் தீவிரமடைந்தன. இவை தொடர்பில் எந்தத் தீர்வுகளும் முஸ்லிம்களுக்கு கிடைக்கவில்லை.

மைத்திரிபால சிறிசேன எந்தவொரு இடத்திலும் முஸ்லிம்கள் தனக்கு வாக்களித்ததாக சொல்லவில்லை. தனது வெற்றிக்கு தமிழ்க் கூட்டமைப்பே காரணம் என பல இடங்களில் கூறியிருக்கின்றார்.

எனவே தான் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் களமிறங்கி அவர் ஊடாக பிரதான வேட்பாளருக்கு விருப்பு வாக்கைப் பெற்றுக் கொடுக்கலாம். களமிறங்கும் முஸ்லிம் வேட்பாளருக்கு 25 வீதமான வாக்குகள் கிடைத்தாலே போதும்.

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளைத் தெரிவு செய்வதற்காக இதுவரை ஏழு தேர்தல்கள் நடந்துள்ளன. 1982, 1988, 1994, 1999, 2005, 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் அந்தத் தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 1999, 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் முஸ்லிம் வேட்பாளர்களும் போட்டியிட்டனர். 1999ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அப்துல் ரசூல் என்பவர் போட்டியிட்டார்.

2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முகமட் காசிம் இஸ்மயில், ஐதுரஸ் முகமட் இலியாஸ் மற்றும் முகமட் முஸ்தபா ஆகியோர் போட்டியிட்டிருந்தனர். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஐதுருஸ் முகமட் இலியாஸ் மற்றும் இப்றாகிம் மிப்லார் ஆகியோர் போட்டியிட்டிருந்தனர்.