சிரியாவின் அரசுப் பகுதிகளைக் கைப்பற்றிய துருக்கி கிளர்ச்சியாளர்கள்

சிரியாவில் அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதியை துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

இது குறித்து சிரியாவில் போர்க் கண்காணிப்புக் குழு கூறும் போது, “வடமேற்கு சிரியாவின் வடக்குப் பகுதியில் சமீபத்தில் அரசுப் படைகளால் கைப்பற்றப்பட்ட முக்கிய பகுதியை துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்“ என்று தெரிவித்துள்ளது.

சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் ரஷ்யாவின் உதவியுடன் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றது. இதில் அரசுப் படைகளுக்கு பல இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது.

இதில் துருக்கியின் கண்காணிப்புத் தளங்களும் அடங்கும். இதன் காரணமாக துருக்கி மற்றும் சிரிய படைகளுக்கிடையே மோதல் வலுத்துள்ளது. உள்நாட்டுப் போர் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் முதல் சுமார் 90,000 பேர் சிரியாவில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

முன்னதாக, சிரியாவில் அதிபர் ஆசாத்திற்கும் ஐ.எஸ்.பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகின்றது. இதில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன. போர் காரணமாக ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லபட்டுள்ளனர்.