சித்தரவதைகளுக்குப் பெயர்போன ஒருவர் சி.ஐ.டி.க்குப் பொறுப்பாக நியமனம்: யாஸ்மின் சூக்கா குற்றச்சாட்டு

சித்திரவதைகளில் ஈடுபடுபவர் என நன்கு அறியப்பட்ட ஒருவர் இலங்கையின் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

சிஐடியிற்கு பொறுப்பாக சித்திரவதைகளில் ஈடுபடுபவர் என நன்கறியப்பட்ட ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதால் இலங்கை காவல்துறையின் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கான சர்வதேச உதவிகள் நிறுத்தப்படவேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் அறிக்கையொன்றில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அடம்பரகே ருவான் பிரசன்ன ஜயக் டி அல்விஸ் இலங்கை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார் என சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

பல நீதிமன்ற ஆவணங்களில் பிரசன்ன டி அல்விஸ் சித்திரவதைகளில் ஈடுபட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள சர்வதே உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் 2019 இல் கலிபோர்னியாவில் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக 19 தமிழர்கள் தாக்கல் செய்த மனுவிலும் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலிற்கு முன்னர் இதுமிகவும் கவலையளிக்கும் ஒரு நடவடிக்கை என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலர் பிரசன்ன டி அல்விஸ் தங்களை சித்திரவதை செய்தார் அல்லது சித்திரவதைகளுடன் தொடர்புபட்டிருந்தார் என தெரிவித்துள்ளனர் என ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் 1998வரை நீள்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

பிரசன்ன டி அல்விஸ் எப்போதும் கோத்தபாய ராஜபக்சவிற்கு மிகவும் விசுவாசமானவராக காணப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ள ஜஸ்மின் சூக்கா யுத்தம் இடம்பெற்றவேளை அல்விஸ் காவல்துறையின் பயங்கரவாத விசாரணை பிரிவில் பணியாற்றியவேளை கோத்தபாய ராஜபக்ச அவரிற்கு நேரடியா உத்தரவுகளை வழங்குவார் என குறிப்பிட்டுள்ளார்.