சிங்கள அரசின் ஆளுநர் மூலம் ஐ.நா அதிகாரிக்கு தமிழர்களின் பிரச்சனைகளை மறைக்க முயற்சி

சிறிலங்காவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சுதந்திர உரிமைக்கான ஐ.நா. சமாதான சபையின் விசேட பிரதிநிதி கிளெமென்ற் நயாலெட்சோசிவூல் ஆளுநர் சுரேன் ராகவனை கொழும்பில் சந்தித்தார்.

வடமாகாண ஆளுநர் என்ற ரீதியில்  மாகாணத்தின்  அபிவிருத்தி, பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது  தொடர்பாக விளக்கமளித்தார்.

காணியற்ற மக்களுக்கு காணிகளையும், குடிநீர் மற்றும் விவசாயத்திற்குத் தேவையான நீரினையும் வழங்குவது தொடர்பாகவும், வடமராட்சி களப்புத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும், வடமாணத்தில் கூட்டுறவு வங்கி ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பாகவும் ஆளுநர் விளக்கமளித்தார்.

ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ்ப் பொது மக்களின் காணிகளை மீட்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது குறித்தும் ஆளுநர் விளக்கமளித்தார்.

சிறீலங்காவில் மக்கள் ஒன்று கூடுவதற்கு சுதந்திரம் உள்ளதா என அறிவதற்காக சென்ற ஐ.நா அதிகாரிக்கு சிங்களப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை மீண்டும் தமிழ் மக்களுக்கு வழங்கும் நிகழ்வை காண்பித்து சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்பு மற்றும் அச்சுறுத்தல்களை மறைக்கும் முயற்சியில் சிங்கள அரசின் ஆளுநர் ஈடுபட்டுள்ளார்.