சஹ்ரான் குறித்து இலங்கை புலனாய்வு 97 தடவை எச்சரித்ததாம்

ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது குழுவினர் தொடர்பான 97 புலனாய்வு அறிக்கைகள் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பலரால் தாக்கல் செய்த மனுக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) உயர் நீதிமன்றில் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூரிய தலைமையிலான ஏழு பேர் கொண்ட அமர்வின் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, 2016 ஆம் ஆண்டு முதல் தாக்குதல் இடம்பெறும் வரை, குறித்த 97 அறிக்கைகள் அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் நிலந்த ஜெயவர்த்தனவினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

குறித்த மனுக்களின் பிரதிவாதிகளாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இன்று இடம்பெற்ற விசாரணையின்போது, 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு ஜனாதிபதியும் அமைச்சர்களும் பொறுப் பேற்க வேண்டும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன தெரிவித் திருந்தமை குறிப்பிடத்தக்கது.