சவேந்திர சில்வா மீதான தடைக்கு “இதுதான்” காரணம்: உதய கம்மன்பில சொல்கின்றார்

போரை நிறைவுக்குக் கொண்டு வந்து அமெரிக்காவுக்கு அவமானத்தை ஏற்படுத்தியமை தான் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா செய்த தவறாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிவித்துரு யஹல உருமய தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

“தருஸ்மன் அறிக்கையிலும் எந்த வொரு சாட்சியும் இல்லாத நிலையிலேயே, இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா பயணத் தடையை விதித்துள்ளது. ஆனால், அமெரிக்காவுக்குச் செல்வதற்கான எந்தவொரு எண்ணமும் தனக்கு இருந்ததில்லை என இராணுவத் தளபதி அதற்குத் தக்க பதிலடியை வழங்கியுள்ளார்.

எனினும், இலங்கை இராணுவத்தளபதி எந்த நீதிமன்றினால், யுத்தக் குற்றவாளி எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் என நான் சம்பந்தப்பட்ட தரப்பிடம் கேட்க விரும்புகிறேன். சவேந்திர சில்வாவுக்கு மட்டும் தான் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், அவர் மட்டுமே செய்த யுத்தக் குற்றச்சாட்டு என்ன என்றும் அமெரிக்கா எமக்கு பதிலளித்தே ஆகவேண்டும்.

யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவர அமெரிக்காவினாலேயே முடியாமல் போனது. இப்படியான பயங்கரவாதத்தை முற்றிலுமாக அழித்தொழித்து, அமெரிக்காவுக்கு அவமானத்தை ஏற்படுத்தியமைதான் சவேந்திர சில்வா செய்த பாரிய குற்றமாகுமாகும். இதுமட்டும்தான் அமெரிக்கா அவர் மீது கோபம் கொள்ள ஒரே ஒரு காரணமாக இருக்கிறது” என்றார்.