சவேந்திர சில்வாவின் நியமனத்தால் எழுத்த எதிர்ப்பைக் குறைக்கவே அவசரகாலச்சட்டம் நீக்கம்

அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டபோதும் முஸ்லீம் தீவிரவாத இயக்கங்கள் மீதான தடை நீஎக்கும் என சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு நேற்று (24) தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

தேசிய தௌகீத் ஜமாத், ஜமாதி மில்லாது இப்ராகீம் மற்றும் விலாயத், செய்லானி ஆகிய அமைப்புக்கள் மீதான தடை தொடர்ந்து நீடிக்கும்.

இந்த இயக்கங்கள் 1978 ஆம் ஆண்டு சிறீலங்காவில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு அமைவாக தடைசெய்யப்பட்டுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அனைத்துலக சமூகத்தை ஏமாற்றும் நோக்கத்துடன் சிறீலங்கா அரசு அவசரகாலச்சட்டத்தை நீக்கியுள்ளதுடன், அதற்கு இணையான அதிகாரங்களை சிறீலங்கா படையினருக்கு வழங்கியுள்ளது.

முப்படையினருக்கும் தாம் அதிக அதிகாரங்களை வழங்குவதாக சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேன கடந்த வியாழக்கிழமை (22) வெளியிட்ட தனது அரச அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றவாளி சவேந்திர சில்வாவின் நியமனத்தால் எழுந்துள்ள எதிர்ப்புக்களைச் சமாளிக்கவே சிறீலங்கா அரசு அவசரகாலச்சட்டத்தை நீக்கியுள்ளது என கருதப்படுகின்றது.