சவுதியின் வான்படை ஆயுதக்கிடங்கின் மீது யேமன் ஆயுதக்குழுவினர் ஏவுகணைத் தாக்குதல்

சவுதி அரேபியாவின் வான்படை நிலையத்தில் உள்ள ஆயுதக் களஞ்சியம் மீது குண்டுகள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானத்தின் மூலம் நேற்று (21) தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளதாக யேமன் ஆயுதக்குழு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை சவுதி அரேபியாவும் உறுதிப்படுததியுள்ளதாக அல்ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

சவுதியின் தலைநகரான றியாத்தில் இருந்து 840 கி.மீ தொலைவில் உள்ள எல்லைப்புற நச்ரான் நகரத்தின் வான்படைத் தளமே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

யேமன் மீது சவுதி மேற்கொண்ட வான்தாக்குதலுக்கு பதிலடியாகவே யேமன் ஆயுதக்குழுவினர் சவுதி மீது மீண்டும் மீண்டும் தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர்.

இதனிடையே தாக்குதலுக்கு உள்ளான வான்படைத்தளத்தில் அமெரிக்காவின் புலானாய்வுப் பிரிவினர் தளம் அமைத்திருந்ததாகவும், அமெரிக்க இராணுவத்தின் கிறீன் பரட்ஸ் சிறப்புப் படையணிகள் நிலைகொண்டிருந்தாகவும் கடந்த வருடம் நியூயோர்க் ரைம்ஸ் தெரிவித்திருந்தது.

சவுதி அரேபியாவை உள்ளடக்கிய கூட்டுப் படையினரின் வான் தாக்குதலின் உதவியுடன் யேமனில் தொடர்ந்து இடம்பெறும் போரில் இதுவரையில் பல ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏறத்தாள 3 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

கடந்த வாரமும் யேமன் ஆயுதக்குழுக்கள் மேற்கொண்ட ஆளில்லாத விமானத் தாக்குதல்களில் சவுதி அரேபியாவின் இரண்டு எண்ணைக்குழாய்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.